» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் விபத்துகளைத் தடுக்க வேகத்தடை : சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை!

திங்கள் 16, பிப்ரவரி 2026 3:09:56 PM (IST)

தூத்துக்குடி மாநகரின் முக்கிய சந்திப்புகள் மற்றும் நெடுஞ்சாலைப் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளைத் தடுக்க வேகத்தடைகள் அமைக்கக் கோரி, சமத்துவ மக்கள் கழகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தின் எதிரே அமைந்துள்ள அண்ணா சிலை ரவுண்டானாவைச் சுற்றி பாளையங்கோட்டை சாலை, பாலவிநாயகர் கோவில் தெரு, வி.இ. சாலை, பெருமாள்புரம் மற்றும் தேவர்புரம் சாலை ஆகிய ஐந்து முக்கியச் சாலைகள் சந்திக்கின்றன.

இப்பகுதியைச் சுற்றி சுப்பையா வித்யாலயம் (ஆரம்ப மற்றும் மகளிர் பள்ளி), கே.வி.எஸ் ஆங்கிலப் பள்ளி, பாரதியார் வித்யாலயம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அரசு மருத்துவமனை, வீரமணி மருத்துவமனை, ஏ.வி.எம் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகள் காய்கனி மார்க்கெட் மற்றும் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளன.

இதனால் மாணவர்கள், வியாபாரிகள், நோயாளிகள் எனப் பொதுமக்கள் நடமாட்டம் இப்பகுதியில் எப்போதும் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக, பாலவிநாயகர் கோவில் தெரு மற்றும் வி.இ. சாலையிலிருந்து வரும் வாகனங்கள் அதிவேகமாக வருவதால், இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

அதேபோல், மாநகராட்சியின் 56-வது வார்டுக்கு உட்பட்ட தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில், டாக் நகர் மற்றும் தவசி பெருமாள் சாலைப் பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், பேருந்து நிறுத்தங்களுக்குச் செல்ல இச்சாலையைக் கடக்க வேண்டியுள்ளது. அதிவேகமாகச் செல்லும் வாகனங்களால் இப்பகுதியில் அடிக்கடி உயிரிழப்புகளும், விபத்துகளும் ஏற்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி, அண்ணா சிலை சந்திப்பு பகுதி மற்றும் டாக் நகர், தவசி பெருமாள் சாலை ஆகிய இடங்களுக்கு முன்பாக உடனடியாக வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்குச் சமத்துவ மக்கள் கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிகழ்வில் மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் வக்கீல் சகாயராஜ், மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்டத் துணைச் செயலாளர் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், மாவட்டத் தொண்டர் அணி செயலாளர் முத்துசெல்வம், வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், 56-வது வார்டு செயலாளர் ஜெயகர் மற்றும் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப சாவு!

திங்கள் 6, ஏப்ரல் 2026 10:24:56 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory