» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனித் திருவிழா தொடக்கம்: ஏப்ரல் 13ல் தேரோட்டம்!

திங்கள் 6, ஏப்ரல் 2026 8:20:49 AM (IST)



கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலில், பங்குனிப் பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவிலில், இந்த ஆண்டிற்கான பங்குனிப் பெருந்திருவிழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் தொடக்கமாக நேற்று அதிகாலை 4 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை மற்றும் திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்குச் சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்புள்ள கொடிப் பட்டத்திற்குச் சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு, மேளதாளங்கள் முழங்க ரத வீதிகள் வழியாக ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது.

காலை 7:30 மணியளவில், வேத விற்பன்னர்களின் மந்திரங்கள் முழங்கச் சுவாமி சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் திருவிழாக் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் கொடிமரம், நந்தியம் பெருமான் மற்றும் பலிபீடத்திற்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, நகர்மன்றத் தலைவர் கருணாநிதி, த.மா.கா. மாவட்டத் தலைவர் ராஜகோபால், அறங்காவலர் குழுத் தலைவர் ராஜகுரு மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு மேல் சுவாமி மற்றும் அம்பாள் பூங்கோவில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறவுள்ள இந்தத் திருவிழாவில், தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 13 (திங்கட்கிழமை) நடைபெறும். ஏப்ரல் 14: தீர்த்தவாரி உற்சவம். ஏப்ரல் 15: இரவு தெப்பத் திருவிழ நடைபெறும்.  திருவிழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) வள்ளிநாயகம், ஆய்வாளர் ஆனந்தராஜ் மற்றும் மண்டகப்படிதாரர்கள் சிறப்பாகச் செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory