» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!

ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)



தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியனின் தேர்தல் பணிமனை இன்று திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தனது முதற்கட்டப் பிரச்சாரத்தைத் தீவிரமாகத் தொடங்கினார்.

தூத்துக்குடி எஸ்.ஏ.வி. பள்ளி மைதானம் எதிரில் அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியனின் தேர்தல் காரியாலயத்தைத் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளருமான எஸ்.பி. சண்முகநாதன் திறந்து வைத்தார். இந்நிகழ்விற்கு வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி. சண்முகநாதன் கூறியதாவது: "தூத்துக்குடி தொகுதியில் சி.த. செல்லப்பாண்டியன் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். கடந்த காலங்களில் இதே தொகுதியில் கீதா ஜீவனைத் தோற்கடித்து, ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகச் சிறப்பாகப் பணியாற்றியவர் அவர். வரும் 23-ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி.

நிர்வாகிகள் பூத் வாரியாகப் பிரிந்து தீவிரப் பணியாற்ற வேண்டும். ஒரு பூத்திற்குச் சராசரியாக 900 வாக்குகள் இருக்கும்; அங்கு 30 பேர் கொண்ட குழுவினர் தினசரி வீடு வீடாகச் சென்று அதிமுக அரசின் சாதனைகளையும், திமுக ஆட்சியின் குறைகளையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். மாவட்டத்தில் அதிமுக போட்டியிடும் 4 தொகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 2 தொகுதிகள் என 6 தொகுதிகளையும் வென்று எடப்பாடியார் காலடியில் சமர்ப்பிக்க அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும்."

காரியாலயம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, தூத்துக்குடி அருள்மிகு வைகுண்டபதி பெருமாள் கோவில் முன்பிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் தொடங்கினார். அவருடன் மாவட்டச் செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் இணைந்து வாக்கு சேகரித்தார். பெருமாள் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு, வடக்கு வீதி, ரங்கநாதபுரம், எட்டையாபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.

இந்நிகழ்வில் அதிமுக தொகுதிப் பொறுப்பாளர் சின்னத்துரை, முன்னாள் எம்.பி. தியாகராஜ் நட்டர்ஜி, வழக்கறிஞர் ஆண்ட்ரூஸ் மணி, பகுதிச் செயலாளர்கள் முருகன், ஜெய்கணேஷ், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர். ஹென்றி, நிர்வாகிகள் பிரபாகரன், கூட்டணி கட்சிகளின் சார்பில் பாஜக மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஆன்மீகப் பிரிவு செயலாளர் உஷா தேவி, மாவட்ட மருத்துவ அணி பாலாஜி, புரட்சி பாரதம் மாவட்டச் செயலாளர் மாரிச்செல்வம், பாமக மாவட்டச் செயலாளர் லட்சுமணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory