» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!

ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)



தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை தொடர்பாக திமுக அரசின் அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது. 

இதுகுறித்துபாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க), தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூபாய் 136.35 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் கட்டப்பட்டு வந்த பல்நோக்கு மருத்துவமனையை திமுக அரசானது "மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனையாக" மட்டும் மாற்றுவதாக வெளியிட்டுள்ள அரசாணைக்கு பாரதிய ஜனதா கட்சி கடுமையான கண்டனம் தெரிவிக்கிறது. 

பல்நோக்கு மருத்துவமனைத் திட்டம் தொடங்கப்பட்டு, 95 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல்நோக்கு மருத்துவமனையானது இதய அறுவைசிகிச்சை, புற்றுநோய், சிறுநீரகப் பிரச்சனை, நரம்பியல் போன்ற பல்வேறு நோய்களுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கவும், அதிநவீன மருத்துவ வசதி பெறவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.

இந்த நடவடிக்கை தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி, மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புக்கு மாறாக அதன் நோக்கத்தை மாற்றுவது அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயல். திமுக அரசின் இந்த முடிவு, மக்களின் அடிப்படைத் தேவையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கையாகத் தெரியவில்லை என்றும், மாறாக தனியார் மருத்துவ நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான செயலாகத்தான் தெரிகிறது.

மேலும், மத்திய அரசின் நிதிப் பங்களிப்பு அதிகம் இருப்பதால், இதன் வெற்றி பா.ஜ.க. அரசுக்கு நற்பெயர் ஈட்டித் தந்துவிடுமோ என்ற காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்தத் திட்டம் புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அவர்களின் கனவான 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கை அடைய, தூத்துக்குடி மாவட்டத்திற்குப் புதிய விமான நிலையம், துறைமுக விரிவாக்கம், கப்பல் கட்டும் தளம், குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் போன்ற பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

திமுக அரசானது பல்நோக்கு மருத்துவமனைத் திட்டத்தை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றும் அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். 95 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்த கட்டடத்தில், உடனடியாகப் பல்நோக்கு மருத்துவமனைக்கான அனைத்துச் சிறப்பு மருத்துவர்களையும் நியமித்து, அதிவிரைவில் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், தெற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் கடுமையான சட்டப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory