» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துறைமுக கேண்டீன் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் : வழக்கறிஞர்களுக்கு பாராட்டு!

வெள்ளி 12, டிசம்பர் 2025 3:48:40 PM (IST)

தூத்துக்குடி துறைமுக கேண்டீன் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பை பெற்றுத் தந்த வழக்கறிஞர் குழுவை கேண்டீன் தொழிலாளர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் துவக்கப்பட்ட காலம் முதல் தற்போது வரை இயங்கி வரும் துறைமுக கேண்டீனில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் 56 பேர் தங்களை துறைமுக ஊழியர்களாக நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரி துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 1998-ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில், வழக்கு தாக்கல் செய்யப்பட்ட தினத்தில் இருந்து தொழிலாளர்களை பின் ஊதியத்துடன் நிரந்தரப்படுத்த வேண்டும் என்று 2004 ஆம் ஆண்டு நீதியரசர் சிவசுப்பிரமணியன் தீர்ப்பு வழங்கினார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து துறைமுக நிர்வாகம் உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டில் தனி நீதிபதி தீர்ப்பை இரு நீதிபதிகள் அமர்வு 2007-ல் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 11 ஆண்டுகள் நடைபெற்ற விசாரணைக்கு பின்பு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து முடிவு செய்ய வேண்டும் என்று வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 2019-ல் திருப்பி அனுப்பியது.

கொரோனா நோய் பரவல் காரணமாக வழக்கு எடுத்துக் கொள்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கு பிறகு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீதியரசர் குமரேஷ் பாபு வழங்கிய தீர்ப்பில் கேண்டீனை துறைமுக கேண்டீன் என்று அறிவிப்பதாகவும், கேண்டீனில் பணிபுரிந்த 56 தொழிலாளர்களையும் உயர்நீதிமன்றத்தில் முதலில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட 1998 ஜீலை மாதத்தில் இருந்து நிரந்தரப்படுத்துவதாகவும், தீர்ப்பு வழங்கப்படும் நாளில் இருந்து துறைமுக தொழிலாளருக்கான ஊதியம் வழங்கப்படும் என்றும் தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை அமுல்படுத்த மறுத்து நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. நீண்ட கால காத்திருத்தலுக்கு பின்னர் பெறப்பட்ட தீர்ப்பில் பின்தேதியிட்டு துறைமுக தொழிலாளருக்கான ஊதியம் வழங்கப்படாததும், 1998க்கு பின்னர் துறைமுக கேண்டீன் ஊழியராக நிரந்தரம் செய்யப்பட்ட 13 தொழிலாளர்கள் குறித்து எதுவும் சொல்லப்படாததையும் குறிப்பிட்டு சிஐடியு தொழிற்சங்கமும் மேல்முறையீடு செய்தது. 

அந்த மேல்முறையீடுகளின் மீது இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையில் நவம்பர் 26 அன்று நீதியரசர்கள் எம்.எஸ்.ரமேஷ், சக்திவேல் அமர்வு அளித்த தீர்ப்பில் மேல்முறையீடுகளை தள்ளுபடி செய்தும், 1998-க்கு பின்னர் பணியில் சேர்ந்த 13 தொழிலாளர்களுக்கும் தனி நீதிபதி நீதியரசர் குமரேஷ்பாபு அளித்த தீர்ப்பு பொருந்தும் என்றும், சென்னை துறைமுகத்தில் கேண்டீன் ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்பட்ட அதே முறையில் மூன்று மாத காலத்திற்குள் தூத்துக்குடி வ.உ.சி துறைமுக தொழிலாளர்களுக்கும் தீர்ப்பை அமுல்படுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறு ஆண்டு காலமாக வழக்கை நடத்தி 69 துறைமுக கேண்டீன் தொழிலாளர்கள் குடும்பத்தினரின் வாழ்க்கை பாதுகாப்பு ஏற்படுத்த உதவி செய்யும் தீர்ப்பை பெற்று தந்த வழக்கறிஞர் வீ.அஜாய் கோஷ் தலைமையிலான வழக்கறிஞர் குழுவை அவரது அலுவலகத்தில் சிஐடியு தூத்துக்குடி மாவட்டச் செயலாளரும், துறைமுக ஜனநாயக ஊழியர் சங்க துணைத்தலைவருமான ரசல் தலைமையில் கேண்டீன் தொழிலாளர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory