» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நம்முடைய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டினை ஒரு நாளும் மறக்க கூடாது: அமைச்சர் பி.கீதா ஜீவன்
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:55:29 PM (IST)

நம்முடைய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டினை ஒரு நாளும் மறக்க கூடாது மற்றும் விட்டுக் கொடுக்க கூடாது என்று மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான மிதிவண்டிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மாணவியர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் 506 மாணவியர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது : இன்றையதினம் பள்ளி மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்குகின்ற இந்நிகழ்வில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து மாணவியர்களும் நல்ல முறையில் படிக்க கூடிய வகையில் தரமான கல்வி மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பள்ளி தலைமையாசிரியர் அவர்களின் தலைமையில் அனைத்து ஆசிரியர்களும் அதிக முயற்சி எடுத்து, வெற்றியை அடைந்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களை கூறிக்கொள்கிறேன்.
நல்ல ஒழுக்கமுள்ள மாணவியர்கள் மற்றும் என்சிசி, சாரணர் மற்றும் இயக்கங்கள் (Guides and Scouts) போன்ற அமைப்புகள் இருக்கிறது. இந்த அமைப்புகள் மூலம் நாம் குழுவாக இணைந்து செயல்படக்கூடிய பழக்க வழக்கங்களையும், தைரியமாக எதையும் சந்திக்கக்கூடிய குணங்களையும், கண் துஞ்சாது எவ்வாறு பணிகளை செய்வது, எந்த அளவிற்கு நாம் தயாராக வேண்டும் என்ற நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் நற்பண்புகள் மாணவியர்களிடையே வளர்வதற்கு காரணமாக இருக்கும்.
தமிழ்நாடு முதலமைச்சர் கல்வியும், மருத்துவமும் இரண்டு கண்கள் என்று கூறுகிறார்கள். மருத்துவ வசதிகள் குக்கிராமங்கள் வரை உள்ள மக்களுக்கு கிடைக்க வேண்டும். கல்வி என்பது எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவருக்கும் கிடைத்து வருகிறது. பெருந்தலைவர் காமராஜர் மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் காலத்திலிருந்து, பள்ளி கல்வி என்பது எல்லா இடங்களிலும், குறிப்பாக குக்கிராமங்கள் வரை உள்ளவர்களுக்கும் சென்று சேர்ந்து விட்டது. தரமான கல்வியை மாணாக்கர்களுக்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் நமது தமிழ்நாடு முதலமைச்சர் அதிக சிரத்தை எடுத்து வருகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் அதிக நிறுவனங்களை சந்தித்தார்கள். கொரோனா காலகட்டத்தில் பள்ளி கல்லூரிகள் நடைபெறவில்லை. ஆசிரியர்கள் அனைவரும் மிகவும் சிரமம் பட்டனர். எனவே, அந்த நிறுனங்கள், கல்லூரி முடித்து வருகின்ற மாணாக்கர்கள் எங்கள் நிறுவனத்திற்கேற்ற தகுதியுடைய மாணாக்கர்களாக உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். அதனை கருத்திற்கொண்டு எண்ணும் எழுத்தும், வானவில் ஆயிரம், திறன் மேம்பாட்டு பயிற்சி, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பள்ளி மாணாக்கர்களுக்காக செயல்படுத்தி வருகிறார்கள். சில மாணவியர்கள் நண்பர்கள் எங்கு சேருகின்றார்களோ அங்குதான் செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். ஆனால் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு முடித்த பிறகு, என்ன படிக்கலாம்? என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது? எதை தேர்வு செய்யலாம்? என்னென்ன திட்டங்கள் இருக்கிறது? கல்வி உதவித்தொகை மற்றும் மாணவியர்களாகிய உங்களுக்கு ஏற்ற வகையில் என்ன கல்லூரி இருக்கிறது? என்ன உயர்கல்வி படிக்கலாம்? எந்த நிறுவனத்தில் பணிபுரியலாம்? நமது பெற்றோர்களின் தொழிலை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்து முடிவெடுத்தல் போன்றவை இத்திட்டத்தின் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நான் படித்த காலகட்டத்தில் இது போன்ற வாய்ப்புகள் எங்களுக்கு இல்லை. ஆனால் இப்பொழுது உங்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது? என்ன மாதிரியான படிப்பினை தேர்ந்தெடுக்கலாம்? என்ற வழிகாட்டுதல்கள் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, குறிப்பாக மாதிரிப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அனைத்து வகையான பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது மற்றும் உயர்கல்வி பயிலுவதற்கான அனைத்து கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது பட்ட படிப்பு முடித்த பிறகு வெளி நாடு சென்று படிப்பதற்கும் அரசு உதவி செய்கிறது. 4 ஆண்டுகளில் 326 மாணவ மாணவியர்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் உள்ளிட்ட பெரிய பல்கலைகழகங்களில், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. மாணவ மாணவியர்களின் படிப்புக்கேற்றவாறு கல்வி கட்டணத்தையும் அரசே செலுத்தி வருகிறது. ஆகவே, பள்ளி மற்றும் கல்லூரி அளவில் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் அதிக முயற்சி எடுத்து வருகிறார்கள். போட்டியான உலகத்தில் நமது மாணாக்கர்களும் அதற்கு இணையாக செயல்பட்டு பல்வேறு பணி வாய்ப்புகள் பெறவேண்டும். எதிர்காலத்தில் உங்கள் முன்னால் அமர்ந்திருக்கின்ற இந்த இடங்களில் நீங்கள் ஆசிரியராகவோ, தலைமையாசிரியராகவோ அல்லது அனைத்து உயர் பதவிகளில் கண்டிப்பாக வருவீர்கள். ஆகவே நீங்கள் தான் எதிர்கால தலைவர்கள்! என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நம் தமிழ்நாடு, நமது மொழி தமிழ் மொழி என்ற உணர்வுடன் இருக்க வேண்டும். நம்முடைய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டினை ஒரு நாளும் மறக்க கூடாது மற்றும் விட்டுக் கொடுக்க கூடாது. மாணவியர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் கைபேசிகளை கவனமாக உபயோகப்படுத்துவதில் முறைப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட நேரம் மட்டுமே கைபேசிகளை பயன்படுத்துவேன் என்பதில் நேர ஒதுக்கீடு செய்ய வேண்டும். எனவே, சுயக்கட்டுபாடு என்பது நமக்கு தேவை. சமூக ஊடகங்களினால் பெண்கள் அதிக அளவில் ஏமாற்றப்படுகிறார்கள்.
அதில் பார்க்கின்றவற்றை நம்ப வேண்டும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களின்படி செயல்பட வேண்டும். இணையதளத்தில் பாடம் சம்பந்தமாக உங்களுக்கு தேவையானதை மட்டுமே தேடி, அதனை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். அதுபோல், கைபேசியில் உங்களைப் பற்றிய விவரங்கள், புகைப்படங்கள், கைபேசி எண் உள்ளிட்டவற்றை எதிலும் பதிவிடாதீர்கள். அது பெண்களுக்கு கெடுதலாக வருகிறது. நீங்கள் தைரியமாகவும், மிக கவனமாகவும், யாரும் என்னை ஏமாற்ற முடியாது என்பதில் உறுதியாகவும், எதையும் ஆய்வு செய்து, முடிவெடுக்கின்ற மாதிரி இருக்க வேண்டும் என்று மாணவியர்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.
பெண்கள் உடல் அமைப்பு ரீதியில் பெலவீனமானவர்கள். ஆகவே, கட்டயமாக நல்ல ஊட்டச்சத்தான உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். போட்டியான உலகத்தில் ஆண்களுக்கு இணையாக பணி செய்ய வேண்டும், ஆண்களுக்கு சமமானவர்கள் மற்றும் சம உரிமை என்று குறிப்பிடுகிறோம். ஆனால் வேலை செய்ய வேண்டும் என்றால் உடல் உறுதியாக இருக்க வேண்டும். ஆரோக்கியமும் தேவை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உடல் இயங்குவதற்கு உணவு தேவை. எனவே, நன்றாக சாப்பிடுங்கள். பழங்கள், தானியங்கள், கீரை வகைகள் உள்ளிட்ட சத்தான உணவினை சாப்பிடுகின்ற வகையில் உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பெண்கள் உட்டச்சத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
தொழில்நுட்பம் என்பது மிக முக்கியமாகும். பெண் குழந்தைகளுக்கு ஹார்மோன் மாற்றம் அடைகின்ற இந்த வளரிளம் பருவத்தில், குறிப்பாக 13 – 19 வயதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரையும் பார்த்து ஏமாந்து விடாதீர்கள். 19 வயது முடிந்த பின்னர் முடிவெடுத்துக் கொள்ளலாம். இந்த வயதில் பாதை மாறி விடாமல் இருக்க மிக கவனமாக இருக்க வேண்டும். சில மாணவியர்கள் ஏஐ மூலம் நாங்கள் கைபேசியில் தேடி கற்கின்றோம். ஏன் படிக்க வேண்டும்? என்று எண்ணுகிறார்கள்.
ஆனால் ஏஐ –யை மனிதர்கள் தான் செயல்படுத்துகிறவர்களாக இருக்க வேண்டும். அவை நம்மை செயல்படுத்த கூடாது. ஆகவே, திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்றால், கற்க கசடற என்று அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். மதிபெண்களுக்காக படிக்கின்றோம் என்று நினைக்காமல் அறிவாற்றலை வளர்க்கிறதற்காக படிக்கிறோம் என்று சிந்திக்க வேண்டும். அறிவாற்றலை வளர்க்க நன்றாக படிக்க வேண்டும். இந்த வயதில் நாம் அனைத்தையும் கற்க முடியும். தேவைப்படும் பொழுது அதனை உபயோகப்படுத்தலாம். கல்வியில் முக்கியத்துவம் அளித்து அனைத்தையும் படிக்க வேண்டும்.
இந்த மிதிவண்டியை அனைவரும் உபயோகப்படுத்துங்கள். இது நல்ல ஒரு உடற்பயிற்சியாகும். இதன் மூலம் உடல் உறுதியாகும். நல்ல முறையில் பயன்படுத்துங்கள்! நன்றாக படியுங்கள்! உங்கள் அனைவருக்கும் நல்ல எதிர்காலம் அமைய வேண்டும். சிறந்த சாதனையாளர்களையும், சான்றோர்களையும் உருவாக்கும் பள்ளியாக இந்த பள்ளி வளர எனது வாழ்த்துக்கள் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தில்வேல் முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, பள்ளி தலைமையாசிரியர் ஜெயலதா, ஆசிரியர்கள் மற்றும் மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










