» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் 2027 முதல் செயல்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி

வெள்ளி 12, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

2027-ம் ஆண்டு முதல் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளம் செயல்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இஸ்ரோ தலைவர் நாராயணன் நேற்று வந்தார். அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ககன்யான் திட்டம் என்பது நாம் தயாரிக்கும் ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பி, அவர்களை பத்திரமாக திரும்பக் கொண்டு வரும் திட்டம் ஆகும்.

இந்த திட்டத்திற்காக ராக்கெட் தயாரிப்பு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. விண்வெளியில் வீரர்களுக்கு தேவையான வெப்பநிலை, அழுத்தம், கார்பன்-டை-ஆக்சைடு, ஆக்சிஜன் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அமைப்பின் மேம்பாட்டுப்பணிகளும் சிறப்பாக நடந்து வருகின்றன.

ராக்கெட் ஏவுதலின்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், விண்வெளி வீரர்களின் உயிரை பாதுகாக்கும் வகையில், அவர்களை பத்திரமாக வெளியேற்றும் அமைப்பின் திட்டப்பணியும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த திட்டத்திற்காக கிட்டத்தட்ட 8,000 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மனிதர்களுடன் செல்லும் ககன்யான் விண்கலத்தை 2027-ம் ஆண்டில் விண்ணுக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக ஆட்கள் இல்லாத 3 பரிசோதனை ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட உள்ளன. பிரதமர் நரேந்திரமோடியின் அறிவிப்புக்கு இணங்க, 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய விண்வெளி நிலையம் அமைக்கப்படும். இந்த விண்வெளி நிலையம் மொத்தம் 5 தொகுதிகளாக உருவாக்கப்படும். முதல் தொகுதி அமைக்க 2028-ம் ஆண்டில் ராக்கெட் விண்ணுக்கு அனுப்பப்படும். இதற்கான ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில் இந்த பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 2023-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய குலசேகரபட்டினம் ஏவுதளத்தின் அனைத்துப் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இது ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளமாக அமையும். இந்த திட்டம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என்று பேசுவதற்கு பதிலாக, இந்திய நாட்டிற்கான ஒரு முக்கியமான மையமாக பார்க்கப்பட வேண்டும்.

2027-ம் ஆண்டு தொடக்கத்தில் குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் செயல்பட தொடங்கும். அங்கிருந்து ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படும். சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது போல, சந்திரயான்-4 திட்டமானது நிலவில் தரையிறங்கி, அங்கிருந்து நிலவின் மாதிரிகளை சேகரித்து திரும்ப பூமிக்குக் கொண்டு வரும் இலக்குடன் செயல்படும். இதற்கான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory