» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வைகாசி விசாக திருவிழாவுக்கு கூடுதல் ரயில், பஸ்கள் இயக்க ஏற்பாடு: ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!
வெள்ளி 30, மே 2025 9:02:49 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கூடுதல் ரெயில், பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் 2025 ஆம் ஆண்டு வைகாசி விசாகம் திருவிழா வருகின்ற 09.06.2025 அன்று நடைபெறுவதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்ததாவது: திருச்செந்தூர் திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகச் சிறப்புடைய விழாவான வைகாசி விசாகமும் ஒன்றாகும். வைகாசி வசந்தம் திருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா புராணக் கதைப்படி சாபத்தினால் மீன்களாக மாறியிருந்த பராசரமுனிவரின் நான்கு மகன்களும் திருச்செந்தூர் முருகன் அருளால் சாப விமோசனம் பெற்று மீண்டும் சுயரூபம் அடைந்தனர் என்பது ஐதீகமாகும்.
வைகாசி விசாக தினத்தில் வசந்த மண்டபத்தில் அந்த மீன்களுக்கு ஸ்ரீ ஜெயந்திநாதர் காட்சி தருவது இத்திருவிழாவின் சிறப்பு அம்சமாகும். வைகாசி விசாகம் அன்று சுவாமி தரிசனம் செய்தால் ஆண்டு முழுவதும் முருகனை தரிசனம் செய்தற்கு ஒப்பாகும். இவ்வாண்டு வைகாசி மாதம் 26-ம் தேதி (09.06.2025) திங்கட்கிழமை முருக பெருமான் அவதரித்த ஜென்ம நட்சத்திரம் தினத்தில் வைகாசி விசாகம் நடைபெறவுள்ளது.
அன்றையத்தினம் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், அதிகாலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், காலை 10 மணிக்கு உச்சிக்கால அபிசேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாரதனையும் நடைபெறவுள்ளது. மேலும், வைகாசி விசாகம் திருநாளை முன்னிட்டு 08.06.2025 முதல் 10.06.2025 முடிய மூன்று நாட்கள் சுமார் 5 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் திருக்கோயிலுக்கு குடிதண்ணீர் தட்டுப்பாடின்றிக் கிடைத்திட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் உரிய ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
திருச்செந்தூர் நகர் முழுவதும் சுகாதாரமான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்ய உரிய நடவடிக்கைகளை திருச்செந்தூர் நகராட்சி மேற்கொள்ள வேண்டும். திருச்செந்தூர் நகர்ப் பகுதியில் சேரும் குப்பைக் கூளங்களை அவ்வப்போது அகற்றிட நகராட்சி மூலமாக உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.
திருக்கோயில் வளாகம், குரும்பூர் - குரங்கன்தட்டு நீரேற்று நிலையம், நீரேற்று நிலையம், ஆத்தூர் திருச்செந்தூர் தெப்பக்குளம் நீளேர் நீரேற்று நிலையம், திருச்செந்தூர் தெப்பக்குளம் நீரேற்றும் நிலையம் மூன்று இடங்களில் தங்குதடையின்றி மின் விநியோகம் செய்யத் தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக்ககழகத்தின் மூலம் உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும். வைகாசி விசாகம் திருநாளை முன்னிட்டு தரைவழித் தொலைபேசி மற்றும் அலைபேசி இணைப்புகள் முறையாக சரிவர இயங்க உரிய ஏற்பாடுகளை பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் செய்திட வேண்டும்.
வைகாசி விசாகம் உற்சவம் முன்னிட்டு திருக்கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு எவ்வித தொற்று வியாதிகள் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், ஈக்கள் மற்றும் கொசுக்கள் தொல்லை இல்லாமல் இருக்க திருச்செந்தூர் நகர் பகுதி மற்றும் திருக்கோயில் வளாகங்களில் கொசு மருந்து தெளிக்க பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையும், திருச்செந்தூர் நகராட்சியும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
திருக்கோயில் வளாகத்தில் வைகாசி விசாக திருவிழா நடைபெறும் நாட்களில் மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதியுடன் மருத்துவ சிகிச்சை வழங்கிட தயார் நிலையில் இருந்து உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் பல்வேறு வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். தென்னக ரயில்வே மூலம் 09.06.2025 வைகாசி விசாகத் திருநாளன்று சென்னை மற்றும் திருநெல்வேலிக்கு கூடுதல் ரயில்கள் இயக்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தீயணைப்புத்துறையினர் கடலில், உயிர்க்காப்பு மிதவை வளையங்களுடனும், உயிர்மீட்பு படகுடனும் (லைப்போட்) பாதுகாப்பு பணிபுரியவும் மற்றும் மீன்வளத் துறையினரை நீச்சல்வீரர்கள் கடலாள், முத்துகுளி பணியாளர்களுடன் பாதுகாப்புப் பணிபுரிய வேண்டும். தீயணைப்புத்துறையினர் தீயணைப்பு ஊர்தியில் முழுமையாக தண்ணீர் நிரப்பப்பட்டும், அவசர மருத்துவ ஊர்தியும் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
திருக்கோயிலின் உட்பகுதிகள், வெளிப்பகுதிகள் மற்றும் இதர இடங்களில் பக்தர்களுக்கு போதிய பாதுகாப்புகளை வழங்கிடும் விதமாக காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வைகாசி விசாகம் நடைபெறும் மூன்று நாட்கள் திருக்கோயில் வளாகங்கள் மற்றும் திருச்செந்தூர் நகர்ப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படா வண்ணம் துரித நடவடிக்கைகளை போக்குவரத்து காவல் துறை மேற்கொள் வேண்டும். வைகாசி விசாகம் முன்னிட்டு திருச்செந்தூர் நகராட்சிப் பகுதியில் பழுதடைந்துள்ள சாலைகளை பழுதுபார்த்து சரி செய்திடவும், தெரு விளக்குகள் அனைத்தும் நன்கு இயங்கிட ஏற்பாடுகள் செய்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், வைகாசி விசாகம் முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் பெருமளவில் வருவார்கள் என்பதால் திருச்செந்தூர் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளம் மற்றும் ஆவுடையார்குளத்திற்கு போதிய தண்ணீர் திறந்துவிட கீழ்தாமிரபரணி வடிநிலக் கோட்ட நீர்வளத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக போற்றப்படுவதும், தமிழகத்தின் தலைசிறந்த திருக்கோயில்களில் முக்கியமானதாக கருதப்படுவதமான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகம் விழா மிகச் சிறப்பாக நடைபெற அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபு , திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தக்கார் அருள்முருகன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், இணை ஆணையர் ஞானசேகரன் , திருச்செந்தூர் நகர்மன்றத் தலைவர் சிவஆனந்தி, திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம், காவல்துறை அலுவலர்கள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










