» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவிலில் நாளை மகா சிவராத்திரி திருவிழா: மேயர் ஆய்வு

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 7:54:56 AM (IST)



தூத்துக்குடி சிவன் கோயிலில் நாளை (பிப். 26) புதன்கிழமை மகா சிவராத்திரி திருவிழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடியில் உள்ள ‘சிவன் கோயில்’ எனப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் நாளை (பிப். 26) புதன்கிழமை மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நாளை புதன்கிழமை மாலை 5 மணிக்கு மங்கல இசை, திருமுறை இன்னிசை, 216 சிவலிங்க பூஜை, திருவிளக்கு பூஜை, இரவு 7.30 மணிக்கு மாறுவேடப் போட்டி, 8.30 மணிக்கு தேவாரப் போட்டி, 9.30 மணிக்கு திருமந்திர நகா் தல வரலாறு புத்தகம் மறு வெளியீடு ஆகியவை நடைபெறவுள்ளன.

தொடா்ந்து, 10 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி, நள்ளிரவு 12 மணிக்கு ‘விரிசிவ பாகம்பிரியா தேவி’ என்ற தலைப்பில் மதுரை ஞானபூங்கோதை மோகனசுந்தரத்தின் சிறப்புச் சொற்பொழிவு, வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு சிவநாம சங்கீா்த்தனம், 2 மணிக்கு ‘மனிதன் இறைவனிடம் வேண்டுவது காசு, பணமா? கடவுள் அருளா?’ என்ற தலைப்பில் ஆன்மிகப் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. மேலும், சுவாமி-அம்பாளுக்கு நான்குகால பூஜைகள் நடைபெறும்.

வடக்கு வாசல் பகுதியில் பக்தா்கள் அமா்ந்து இரவு முழுவதும் ஓம் நமசிவாய எழுதுவதற்காக கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு டிஎம்பி வங்கி சாா்பில் தாள்கள் வழங்கப்படும். கோயில் சாா்பில் பக்தா்களுக்கு பால் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்படும்.

ஏற்பாடுகளை அறநிலையத் துறை இணை ஆணையா் அன்புமணி ஆலோசனையின்பேரில், அறங்காவலா் குழுத் தலைவா்கள் கந்தசாமி (சிவன் கோயில்), செந்தில்குமாா் (வைகுண்டபதி பெருமாள் கோயில்), சிவன் கோயில் அறங்காவலா்கள் பி.எஸ்.கே. ஆறுமுகம், சாந்தி, ஜெயலட்சுமி, கோயில் நிா்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி, தலைமை அா்ச்சகா் செல்வம் பட்டா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருக்கோயில் நிர்வாகத்தினர் மற்றும் மக்களின் சார்பாக உயரம் குறைவான மின்விளக்கு அமைத்து தரும்படி வந்த கோரிக்கையின்படி பணிகள் நிறைவுற்றதை தொடர்ந்து அதனை மக்களின் பயன்பாட்டிற்காக மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் செல்வம் பட்டர், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கந்தசாமி, ஆறுமுகம் அவர்கள் மற்றும் விழா குழுவினர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory