» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவல் நிலைய வாசலில் விஷம் குடித்த வாலிபர் : மருத்துவமனையில் அனுமதி!!

ஞாயிறு 23, பிப்ரவரி 2025 10:55:03 AM (IST)

கோவில்பட்டியில் மனைவி கொடுத்த புகாரில் விசாரணைக்கு வந்தபோது, கோவில்பட்டி காவல் நிலைய வாசலில் விஷம் குடித்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குருமலையைச் சேர்ந்தவர் மாரிராஜ் (30), விவசாயி. இவருடைய மனைவி முருகலட்சுமி. இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த ஆண்டு முருகலட்சுமி கணவரை விட்டு பிரிந்து குழந்தையுடன் தோட்டிலோவன்பட்டியில் உள்ள தனது பெற்றோரின் வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் முருகலட்சுமி தனது கணவரிடம் இருந்து நகைகள் மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று தருமாறு கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து மாரிராஜை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு வருமாறும், அப்போது முருகலட்சுமியின் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வருமாறும் போலீசார் தெரிவித்தனர்.

அதன்படி, நேற்று மாரிராஜ் மனைவியின் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக வந்தார். ஆவணங்களை ஒப்படைத்தபின் அவர் காவல் நிலைய வாசலில் வைத்து திடீரென்று விஷத்தை குடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர், ‘நான் விஷம் குடித்து விட்டேன், சிறிது நேரத்தில் இறந்து விடுவேன்’ என்று கூச்சலிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே மாரிராஜை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மாரிராஜ் கூறுகையில், ‘‘நானும், மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்கிறோம். எனது மகளையும் மனைவி அழைத்து சென்றதால், மகளைப் பார்க்க முடியாமல் தவிக்கிறேன். என் மகளை பார்க்க முயற்சி செய்தபோதெல்லாம் காவல் நிலையத்தில் மனைவி புகார் செய்தார்.

இதனால் போலீசாரால் அலைக்கழிக்கப்பட்டேன். எனது மனைவி, குழந்தையை என்னிடம் சேர்த்து வைக்குமாறு போலீசாரிடம் கூறினேன். அது நடக்காததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றேன்’’ என்றார். கோவில்பட்டியில் மனைவி கொடுத்த புகாரில் விசாரணைக்காக வந்த வாலிபர் காவல் நிலைய வாசலில் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory