» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பனிமய மாதாவின் 444-வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!

ஞாயிறு 26, ஜூலை 2026 11:17:35 AM (IST)

snowkodi34i.jpg

உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-வது ஆண்டுத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை 11 நாட்கள் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டின் 444-வது பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு முதலாம் திருப்பலியும், 6 மணிக்கு இரண்டாம் திருப்பலியும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில், பேராலயப் பங்குத்தந்தை ஸ்டார்லின் முன்னிலையில் பனிமய மாதாவின் உருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடி எடுத்து வரப்பட்டது.

பேராலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் ஜெபத்துடனும், கரவொலியுடனும் திருக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அப்போது உலக அமைதியை வலியுறுத்தும் வகையில் பக்தர்கள் வெண்புறாக்களைப் பறக்கவிட்டனர். கொடியேற்றத்திற்கு முன்னதாகப் பக்தர்கள் நேர்த்திக்கடனாகக் கொண்டு வந்த பால் மற்றும் பழங்கள் கொடிமரத்தில் வைக்கப்பட்டு, பின்னர் அனைவருக்கும் வழங்கப்பட்டன. கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு பனிமய மாதாவுக்குப் பொன் மகுடம் அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் த.சரத்குமார், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத், மாவட்ட ஆட்சியர் விஷா மகாஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குப்தா
உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும், ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு மொழிகளில் சிறப்புத் திருப்பலிகள், பிரார்த்தனைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் பவனி ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஆகஸ்ட் 5 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழாநாட்களை முன்னிட்டுத் தூத்துக்குடி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளதுடன், பலத்த காவல் துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory