» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மக்கள் தொகை சுய- கணக்கெடுப்புப் பணிகள் : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 17, ஜூலை 2026 3:17:39 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் தொகை சுய- கணக்கெடுப்புப் பணிகளை மாவட்ட முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும் ஆட்சியருமான விஷு மகாஜன் தொடங்கி வைத்தார்.
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இன் முதற்கட்டப் பணிகளான வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, மற்றும் பொதுமக்களுக்கான இணையவழிச் சுய-கணக்கெடுப்பு (Self-Enumeration) முறையினைத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் தொடங்கி வைத்துள்ளார்.
இந்தியாவில் முதன்முதலாக 1872-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு வெவ்வேறான காலகட்டங்களில் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1881 முதல் பத்து வருடங்களுக்கு ஒருமுறை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2021-ல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால், தற்போது முன்னெடுக்கப்படும் 2027-ஆம் ஆண்டு கணக்கெடுப்பானது 1872 முதல் இத்தொடரில் 16-ஆவது கணக்கெடுப்பாகவும், சுதந்திரத்திற்குப் பிறகு 8-ஆவது கணக்கெடுப்பாகவும் அமையவுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் மாநகராட்சி நீங்கலாக ஏனைய பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலராகவும், தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிக்கு மாநகராட்சி ஆணையர் முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டப் பகுதிகள் (மாநகராட்சி நீங்கலாக): இப்பகுதிகள் 2,784 வீட்டுப் பட்டியல் பிளாக்குகளாகப் பிரிக்கப்பட்டு, 2 முதன்மைப் பயிற்சியாளர்கள் மற்றும் 40 கள பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களால் 2,385 கணக்கெடுப்பு அலுவலர்களுக்கும், 397 மேற்பார்வையாளர்களுக்கும் தலா 50 பேர் கொண்ட குழுக்களாகப் பயிற்சி வழங்கப்படுகிறது. கடந்த ஜூலை 9 முதல் ஜூலை 15 வரை 40 குழுக்களுக்குப் பயிற்சி முடிவடைந்த நிலையில், ஜூலை 16 முதல் ஜூலை 18 வரை எஞ்சிய 19 குழுக்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சிப் பகுதி: தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதி 597 பிளாக்குகளாகப் பிரிக்கப்பட்டு, 2 முதன்மைப் பயிற்சியாளர்கள், 20 கள பயிற்சியாளர்கள், 652 கணக்கெடுப்பு அலுவலர்கள் மற்றும் 97 மேற்பார்வை அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் தலைமையில் பயிற்சி நடைபெற்று வருகிறது.
இணையவழிச் சுய-கணக்கெடுப்பு முறைகள்:
கணக்கெடுப்பாளர்கள் வீடு வீடாக வந்து விவரங்களைச் சேகரிக்கும் முறை ஒருபுறமிருக்க, பொதுமக்கள் தங்களது குடும்ப விவரங்களைச் சுய-கணக்கெடுப்பு மூலம் இணையவழியில் ஜூலை 17, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை பதிவேற்றலாம்.
இதற்காகப் பொதுமக்கள் [https://se.census.gov.in](https://se.census.gov.in) என்ற இணையதளத்தில் உள்நுழைந்து, தமிழ்நாடு மாநிலத்தைத் தேர்வு செய்து, கேப்சா குறியீடு மற்றும் OTP சரிபார்ப்பு மூலம் குடும்ப விவரங்களை உள்ளிட வேண்டும். அமைவிட விவரங்களை உள்ளிட்ட பின், டிஜிட்டல் வரைபடத்தில் தோன்றும் சிவப்பு குறியீட்டை இழுத்து குடியிருப்புக் கட்டிடத்தின் சரியான இருப்பிடத்தை உறுதி செய்ய வேண்டும்.
பதில்கள் வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்டதும், 12 இலக்கச் சுய-கணக்கெடுப்பு ஐடி (Self-Enumeration ID) குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும். கணக்கெடுப்பாளர்கள் கள வருகையின் போது இந்த ஐடி-யைப் பெற்றுத் தரவைச் சரிபார்ப்பர். பொதுமக்கள் சுய-கணக்கெடுப்பு செய்வதற்கான வழிகாட்டு விடியோ தேசிய தகவலியல் மையத்தின் (NIC) [https://thoothukudi.nic.in](https://thoothukudi.nic.in) என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறை:
மின்னணு முறையில் பெறப்படும் இத்தரவுகளின் அடிப்படையிலேயே கிராமம், நகரம் மற்றும் வார்டு மட்டத்திலான அடிப்படை வசதிகள், குடும்ப சொத்துக்கள், கல்வி, மதம், பட்டியல் மற்றும் பழங்குடியினர் விவரங்கள், மொழிகள், இடப்பெயர்ச்சி உள்ளிட்ட சமூக-பொருளாதாரப் பரிமாண நுண்ணிய தகவல்கள் பெறப்பட்டு வருங்கால நலத்திட்டங்கள் வடிவமைக்கப்படும்.
சுய-கணக்கெடுப்புப் பதிவுகளில் சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின், கட்டணமில்லா எண் 1855 அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்களான 0461-2340099, 9486454714 ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி : ஆணையர் ப்ரியங்கா துவக்கி வைத்தார்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:36:16 PM (IST)

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.22,970 பறிமுதல்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:14:15 PM (IST)

சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக ஷேக் அப்துல் காதர் பொறுப்பேற்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:24:53 PM (IST)

மாயமான கல்லூரி மாணவியை மீட்கக் கோரி டிஎஸ்பி அலுவலகம் முன்பு உறவினர்கள் தர்ணா!
வெள்ளி 17, ஜூலை 2026 8:21:32 PM (IST)

தூத்துக்குடியில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது!
வெள்ளி 17, ஜூலை 2026 8:04:33 PM (IST)

சிசு மரணங்களைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
வெள்ளி 17, ஜூலை 2026 5:42:07 PM (IST)








