» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிரீன் காப்பர் பெயரில் ஸ்டெர்லைட்டை திறக்க முயற்சி: முதலமைச்சர் விஜய்யுடன் வைகோ திடீர் சந்திப்பு!

வியாழன் 18, ஜூன் 2026 8:05:01 AM (IST)



தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை "கிரீன் காப்பர்" என்ற மாற்று வடிவத்தில் மீண்டும் திறப்பதற்கு அதன் நிர்வாகம் முயற்சி செய்து வருவதாகவும், அதற்குத் தமிழக அரசு எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கக் கூடாது என்றும் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் வலியுறுத்தியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் நீடித்த இச்சந்திப்பின் போது, தமிழகத்தின் முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ கூறியதாவது: தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு மிக அவசரமாக உரிமம் வழங்கப்பட்டுத் தொடங்கப்பட்டது. அதனை எதிர்த்து நாங்களும், தூத்துக்குடி மாவட்ட பொதுமக்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். தற்போது ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால், இந்த ஆலையை மாற்று வடிவத்தில் "கிரீன் காப்பர்" என்ற புதிய பெயரில் மீண்டும் தூத்துக்குடியில் நிறுவுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதற்காகத் தமிழ்நாடு அரசிடம் அவர்கள் அனுமதி கேட்க உள்ளதாகத் தகவல் வந்துள்ளது. எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்த நச்சு ஆலைக்கு அரசுத் தரப்பில் இருந்து எவ்விதத் தடையில்லாச் சான்றிதழும் வழங்கிடக் கூடாது என்று முதலமைச்சரிடம் விரிவான கோரிக்கை மனுவை அளித்துள்ளேன். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வரும் ஜூலை மாதம் 2-ஆம் தேதி தூத்துக்குடியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.

என்னுடைய 30 ஆண்டுகால நாடாளுமன்ற உரைகளைத் தொகுத்து, 6 பாக புத்தகங்களாக வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள விழாவில் வெளியிட உள்ளோம். இவ்விழாவில் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ளுமாறு முதலமைச்சர் விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளேன்.

முதலமைச்சருடனான இந்தச் சந்திப்பு மிகுந்த மனநிறைவை அளித்துள்ளது. இந்தத் தவெக அரசு அமைந்தது முதல் கமிஷன், ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லாமல், மக்களுக்குக் குளிர்ச்சியூட்டும் வகையில் ஒரு ஆரோக்கியமான நிர்வாகத்தை முதலமைச்சர் வழங்கி வருகிறார். அவர் மிகவும் எளிமையாகவும், இயல்பானவராகவும், வெளிப்படைத் தன்மையோடும் செயல்படுகிறார்.

உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற 2 மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யப்போவதாக வரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. இப்படிப்பட்ட யூகங்களுக்குப் பதில் சொல்ல முடியாது. கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து கோணங்களிலும் விவாதித்து, ஆலோசித்த பின்னரே மதிமுகவின் அரசியல் நிலைப்பாடு குறித்து இறுதி முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

திமுக கூட்டணியில் நீடித்துக் கொண்டே தவெக அரசுக்கு ஆதரவாகப் பேசுவது குறித்த கேள்விக்கு, "தமிழகத்திற்கு நல்லது நடந்தால் அதை வரவேற்பேன், கெட்டது நடந்தால் அதை எதிர்ப்பேன்; இதுதான் வைகோ. திமுகவுடனான கூட்டணி நிலைப்பாடு குறித்துப் பொதுக்குழுவில் தெரியவரும்" என்று அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து

சார்Jun 18, 2026 - 10:30:28 AM | Posted IP 162.1*****

அந்த பெட்டி கோபால் எல்லா கட்சி முதுகில் ஏறி தாவி குடித்து குத்திட்டு வந்து விட்டது. வாய் மட்டும் சரியில்லை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory