» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கப்பல் கட்டும் தளம் திட்டத்தில் முதல்வர் சரியான முடிவெடுப்பார்: தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் பேட்டி!
திங்கள் 15, ஜூன் 2026 12:38:31 PM (IST)
தூத்துக்குடியில் அமையவுள்ள கப்பல் கட்டும் தளம் திட்டத்தில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சரியான முடிவெடுத்து உப்பளத் தொழிலையும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பார் என்று உப்பு உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி கோவளம், பசுவந்தனை, தன்பாடு சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் சங்கச் செயலாளர் சேகர் தலைமையில் நடைபெற்றது. தலைவர் மந்திரமூர்த்தி, பொருளாளர் பொன்ராஜ், நிர்வாகிகள் சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், எல்.ஆர்.சிவாகர், பாலசுப்பிரமணியன், பால், முருகேசன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகி பொன்ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்வாகிகள் கூறியதாவது: "தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை ஒட்டிய கடலோரப் பகுதியில் செயல்பட்டு வரும் உப்பளப் பகுதியில், கப்பல் கட்டும் விரிவாக்கத் தளம் அமைக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முள்ளக்காடு, முத்தையாபுரம், புல்லாவழி, பழையகாயல் வரை உள்ள பல நூறு ஏக்கர் உப்பளங்கள் பாதிக்கப்பட்டு, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழியும் சூழல் உள்ளது. இதனை எதிர்த்து ஏற்கனவே பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தியுள்ளோம்.
தற்போது தமிழகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ளது. அவர் எங்களது உணர்வுகளைப் புரிந்து கொண்டு எங்களைக் காப்பாற்றுவார் என நம்புகிறோம். இது தொடர்பாகத் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்று மீன்வளத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரீநாத்திடம் கோரிக்கை விடுத்தோம். அவரும் உப்பளங்களை நேரில் பார்வையிட்டு எங்களுக்கு நம்பிக்கையூட்டினார். அதேபோல் அமைச்சர் கீர்த்தனாவைச் சந்தித்துப் பேசியபோதும் சாதகமான பதில் கிடைத்தது.
ஆனால், புதிய அரசு எங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய முயன்றாலும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அரசியலுக்காக அதனைத் தடுத்து, உப்பளத் தொழிலை அழிக்கத் துணை போகிறார். தொகுதி மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற அவர், மக்களுக்கு நன்மை செய்யாமல் வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்படுகிறார்.
தேர்தலுக்கு முன்பு இத்திட்டம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிய கனிமொழி எம்பி, தற்போது 'கப்பல் கட்டும் விரிவாக்கத் தளத்தை நாங்கள்தான் கொண்டு வந்தோம்' எனக் கூறி எங்களை வஞ்சித்துள்ளார். தொகுதி மக்களுக்காகப் பணியாற்றாமல் உப்பளத் தொழிலை அழிக்கத் துணியும் அவருக்கு எங்களது பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாங்கள் கப்பல் கட்டும் தொழிலை எதிர்க்கவில்லை; ஆனால் எங்களது வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டாம் என்றே கோருகிறோம். தூத்துக்குடியின் வடபகுதியில் சிப்காட் நிறுவனத்திற்குச் சொந்தமான 1,200 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. ஏற்கனவே 8 பெரிய தொழிற்சாலைகளால் இங்கு சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபட்டுள்ளது. எனவே, சுற்றுச்சூழலையும் உப்பளங்களையும் காக்க, மாற்று நிலமான சிப்காட் தரிசு நிலத்தில் இக்கப்பல் கட்டும் தளத்தை அமைக்க வேண்டும்." இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்தப் பேட்டியின் போது சங்க நிர்வாகிகள் அழகேசன், சண்முகசுந்தரராஜா, சுடலைமணி, சண்முகநாதன், சுயம்பு, ஸ்ரீராம் பொன்ராம், பிரபாகர், பாரத், ராமர் உட்பட பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏழைப் பெண்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் : நல்வாழ்வு சங்கம் கோரிக்கை!
திங்கள் 15, ஜூன் 2026 12:45:00 PM (IST)

உயிரிழந்த கணவரின் சடலத்துடன் 3 நாட்களாக வீட்டிற்குள் முடங்கிய மனைவி, மகள்!
திங்கள் 15, ஜூன் 2026 12:27:22 PM (IST)

கவின் கொலை வழக்கில் 2வது குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கியதற்கு கடும் எதிர்ப்பு - தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!
திங்கள் 15, ஜூன் 2026 12:22:57 PM (IST)

கீழராமசாமியாபுரம் அன்னாள் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் சாதனை!
திங்கள் 15, ஜூன் 2026 12:20:52 PM (IST)

நெல்லை சரகத்தில் 19 இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் - டிஐஜி திருநாவுக்கரசு உத்தரவு!
திங்கள் 15, ஜூன் 2026 11:01:56 AM (IST)

தூத்துக்குடி கோட்டாட்சியர் பிரபு மாற்றம்: தமிழக அரசு உத்தரவு!
திங்கள் 15, ஜூன் 2026 10:54:50 AM (IST)









