» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு : விடுமுறைக்கு வந்த இடத்தில் சோகம்!

வெள்ளி 15, மே 2026 12:28:40 PM (IST)

குலசேகரப்பட்டினத்தில் கோடை விடுமுறைக்குத் தாத்தா வீட்டிற்கு வந்த 8 வயது சிறுவன், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவரது மகன் உதய சுதர்சன் (8). இச்சிறுவன் பள்ளி கோடை விடுமுறைக்காக, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் காவடி பிறை தெருவில் உள்ள தனது தாத்தா முத்துச்சாமி மற்றும் பாட்டி லிங்ககனி (60) ஆகியோரின் வீட்டிற்கு வந்துள்ளான்.

நேற்று மாலை சுமார் 5 மணி அளவில், சிறுவன் உதய சுதர்சன் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது விளையாடிய பந்து, அருகில் உள்ள சௌந்தரராஜன் என்பவரது வீட்டின் அருகே இருந்த ஒரு சிறிய சந்திற்குள் சென்றுள்ளது. அந்தச் சந்தில் ஏற்கனவே மின்கசிவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி சௌந்தரராஜன் அந்தச் சந்தை ஓலைகளை வைத்து மறைத்து வைத்துள்ளார். 

பந்தை எடுப்பதற்காக அந்த ஓலைகளைப் பிரித்துக்கொண்டு சிறுவன் உள்ளே சென்றபோது, அங்கு எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டான். சிறுவனின் வலது கை மற்றும் வலது நெஞ்சுப் பகுதியில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. உடனே அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்க முயன்றனர். ஆனால், மின்சாரம் தாக்கிய வேகத்தில் சிறுவன் உதய சுதர்சன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து குலசேகரப்பட்டினம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுவனின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு குறித்துத் தெரிந்திருந்தும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லையா அல்லது மின்சாரத் துறையின் அலட்சியமா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறைக்கு வந்த இடத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory