» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தடைக்காலத்தால் கிடுகிடுவென உயர்ந்த மீன் விலை: திரேஸ்புரம் துறைமுகத்தில் அலைமோதிய கூட்டம்!

ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:11:03 AM (IST)

மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாத நிலையில், தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை இன்று கடுமையாக உயர்ந்து காணப்பட்டது.

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப்படகுகளில் பெரும்பாலானவை போதிய மீன்கள் கிடைக்காததால் சனிக்கிழமை குறைந்த அளவிலான மீன்களுடனேயே கரை திரும்பின. இருப்பினும், தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் மீன்களை வாங்கத் திரேஸ்புரம் துறைமுகத்தில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. வரத்து குறைவாகவும், தேவை அதிகமாகவும் இருந்ததால் மீன்களின் விலை பல மடங்கு உயர்ந்தது.

அசைவப் பிரியர்களின் விருப்பமான வஞ்சிரம் எனப்படும் சீலா மீன் ஒரு கிலோ 1,300 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை விற்பனையானது. இதேபோல் நண்டு ஒரு கிலோ 900 ரூபாய்க்கும், விளை, ஊழி மற்றும் பாறை ஆகிய ரக மீன்கள் தலா 500 ரூபாய் முதல் 750 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டன.

சிறு வகை மீன்களான கிழவாலை, சூறை மற்றும் கேரை போன்றவை ஒரு கிலோ 250 ரூபாய்க்கு விற்கப்பட்டன. சில்லறை விற்பனை தவிர்த்து கூடை கணக்கிலும் ஏலம் விடப்பட்டது; அதன்படி சாளை மீன் ஒரு கூடை 2,500 ரூபாய்க்கும், முண்டக்கண்ணி பாறை 2,000 ரூபாய்க்கும், வங்கனை மீன் 3,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்து மிகவும் குறைவாக இருந்த போதிலும், கோடை விடுமுறை காரணமாக பொதுமக்களின் தேவை அதிகரித்ததால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

மீன்களின் வரத்து குறைவாக இருந்தபோதிலும், விலை உயர்ந்து காணப்பட்டதால் மீனவர்கள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அடைந்தனர். அதேசமயம், மீன்களின் விலை சாமானிய மக்களின் பட்ஜெட்டைத் தாண்டிச் சென்றது அசைவப் பிரியர்களிடையே சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



Thoothukudi Business Directory