» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தோரணமலையில் விவசாயிகளுக்குக் கௌரவம்; சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா!
புதன் 15, ஏப்ரல் 2026 10:22:23 AM (IST)

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற தோரணமலை முருகன் கோயிலில், சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விவசாயிகளைப் போற்றும் நிகழ்வும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தோருக்கான விருது வழங்கும் விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தமிழகத்தில் அதிகப்படியான படிகளைக் கொண்ட குடவரைக்கோயில்களில் ஒன்றாகத் தோரணமலை விளங்குகிறது. இங்கு தினசரி அன்னதானம், பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பயிற்சிகள் மற்றும் விளையாட்டுப் பயிற்சிகள் எனப் பல்வேறு சமூகப் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன. கோயிலின் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் அவர்கள், மலை அடிவாரத்தில் இலவச நூலகம் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் அரசுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்கிப் பயின்று வருகின்றனர்.
சித்திரை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, முருகப்பெருமானுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, விவசாயப் கருவிகள் மற்றும் கால்நடைகளுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, விவசாயிகள் கௌரவிக்கப்பட்டனர். உற்சவர் முருகனுக்குத் திருமஞ்சனம் நடைபெற்று, வீதி உலா நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் பொங்கலிட்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
இந்நிகழ்வில் திருநெல்வேலி அகில பாரதீய விஸ்வகர்ம ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ புத்தாத்மானந்தா சரஸ்வதி பரமாச்சாரிய சுவாமிகள் (39-வது குருமகா சன்னிதானம், ஸ்ரீமத் பரசமய கோளரி நாத ஆதீனம், ஸ்ரீ இராஜராஜேஸ்வரி பீடம்) கலந்துகொண்டு அருளாசி வழங்கினார். விழாவிற்கு வந்திருந்தவர்களைப் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் வரவேற்றுப் பேசினார். அதனைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்குக் கோளரி நாத ஆதீனம் விருதுகளையும் பொன்னாடைகளையும் வழங்கி கௌரவித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விருதாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் கல்வியாளர்கள் க.சோ. கல்யாணி சிவகாமிநாதன் மற்றும் முனைவர் வேலாயுத சுந்தரராமன், அகத்தியர் சுவடி ஆய்வாளர் க.முத்துகுமார சுவாமி, சமூகப் பணி மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த நடிகர் வேலாயுத பாண்டியன், மருத்துவப் பணியாளர் மணிகண்டன், ஆன்மிகப் பணிக்காக முனைவர் உமா துரைச்சி, எழுத்துப்பணிக்காகத் தூத்துக்குடி மாரிமுத்து ஆகியோர் விருது பெற்றனர். மேலும் தாமிரபரணி மீட்புப் பணிக்காக ராமச்சந்திரன் (சந்துரு) மற்றும் பொன்னன்குறிச்சி துரை, வர்ணனையாளர் முனைவர் சரவணகுமார், பட்டிமன்ற நடுவர் முனைவர் இராம பூதத்தான், வரலாற்று எழுத்தாளர் சாந்தி பிரபு, இலக்கியப் பேச்சாளர் முனைவர் மணிமொழிச்செல்வன், பத்திரிகையாளர் தம்பான், கோயில் பராமரிப்புப் பணிக்காக அந்தமான்-சுந்தர் மற்றும் நாடகப்பணிக்காக காளிமுத்து ஆகியோருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழாவில் லோட்டஸ் முருகன், கடையம் பாரதி, தன்னூத்து குமரன், பாப்பாக்குடி செல்வமணி, மூத்த தமிழறிஞர் சுப்பையா, வர்ணனையாளர் பிரபு உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விருதாளர்கள் சார்பில் முத்துகுமாரசுவாமி ஏற்புரை வழங்கினார். கோளரி நாத ஆதீனத்தின் ஆசியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி: அரசு ஊழியர்கள் தபால் வாக்குப்பதிவு!
புதன் 15, ஏப்ரல் 2026 4:03:33 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.83.93 லட்சம் பறிமுதல்!
புதன் 15, ஏப்ரல் 2026 3:32:23 PM (IST)

மனைவி, குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவன்: தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 15, ஏப்ரல் 2026 3:11:51 PM (IST)

குத்துவிளக்கு ஏற்றியபோது சேலையில் தீப்பற்றி பெண் உயிரிழப்பு : தூத்துக்குடியில் பரிதாபம்
புதன் 15, ஏப்ரல் 2026 12:44:33 PM (IST)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு
புதன் 15, ஏப்ரல் 2026 11:49:49 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் அமல் : 272 விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்!
புதன் 15, ஏப்ரல் 2026 10:41:22 AM (IST)






