» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் வேட்புமனுத் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:59:46 AM (IST)

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன், இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
முன்னதாக, தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள தேர்தல் அலுவலகம் முன்பிருந்து அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் ஊர்வலமாகப் புறப்பட்டார். இந்த ஊர்வலம் காய்கறி மார்க்கெட், மாநகராட்சி அலுவலகம், பழைய பேருந்து நிலையம், குருஸ் பர்ணாந்து சிலை, மார்த்தாண்டம்பட்டி, சத்திரம், சிவன் கோவில் மற்றும் பழைய மாநகராட்சி பிரதான சாலை வழியாகப் பழைய துறைமுகம் எதிரே உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது.
அங்கு, தூத்துக்குடி கோட்டாட்சியரும் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரபு அவர்களிடம் சி.த. செல்லப்பாண்டியன் தனது வேட்புமனுவை வழங்கினார். அவருடன் பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், தொகுதிப் பொறுப்பாளர் சின்னத்துரை, முன்னாள் மேயர் சேவியர் மற்றும் அதிமுக மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் டேனியல் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஜோதிமணி, கே.டி.சி. பேச்சிமுத்து, சங்கர், வழக்கறிஞர் யூ.எஸ். சேகர், நடராஜன், முருகானந்தம், ஆசைத்தம்பி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் ராதா, ஆனந்தராஜ், சண்முகத்தாய், அந்தோணி கிரேசி ஆகியோர் பங்கேற்றனர்.
பாஜக சார்பில் மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் தம்மு சுந்தரம், ஆன்மீகப் பிரிவுச் செயலாளர் உஷா தேவி, மாவட்டப் பொதுச்செயலாளர் ராஜேஷ், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் வெள்ளத்தாய் மற்றும் மண்டலத் தலைவர்கள் சுதா, ராஜேஷ் கனி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலாளர் மாரிச்செல்வம், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் லட்சுமணன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரளாகக் கலந்துகொண்டனர்.
காவல்துறையினருடன் வாக்குவாதம்:
முன்னதாக வேட்புமனுத் தாக்கல் செய்யும் அறைக்குள் வேட்பாளருடன் சேர்த்து மொத்தம் 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற தேர்தல் ஆணையத்தின் விதிமுறை நடைமுறையில் உள்ளது. இருப்பினும், இதனை மீறி அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் இரா. ஹென்றி உள்ளே நுழைய முயன்றார். அவரைப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாகக் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி: அமைச்சர் கீதா ஜீவன் வேட்புமனுத் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 12:33:35 PM (IST)

ஓட்டப்பிடாரத்தில் தவெக வேட்பாளர் மதன் ராஜா வேட்புமனுத் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:55:15 AM (IST)

ஆத்தூர் வெற்றிலை: வரலாற்று ஆவணக் குழுவின் விழிப்புணர்வுப் புத்தகம் வெளியீடு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:14:05 AM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி யாருக்கு? பலமுனை போட்டியால் வாக்குகள் சிதறும் நிலை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 10:33:25 AM (IST)

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு: அறுவடைப் பணியின்போது சோகம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 10:24:56 AM (IST)

செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனித் திருவிழா தொடக்கம்: ஏப்ரல் 13ல் தேரோட்டம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:20:49 AM (IST)







