» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் மாசித் திருவிழா 4-ஆம் நாள்: வெள்ளி வாகனங்களில் சுவாமி, அம்மன் வீதி உலா

புதன் 25, பிப்ரவரி 2026 8:02:13 AM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியாக, நேற்று இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்த ஆண்டுக்கான மாசித் திருவிழா கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நான்காம் நாளான நேற்று செவ்வாய்க்கிழமை காலை, மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

அதனைத் தொடர்ந்து அன்று மாலை, சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ஐந்தாம் நாள் (பிப். 25) முக்கிய நிகழ்வுகள்

திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று (புதன்கிழமை) இரவு 7.30 மணியளவில் மேலக்கோயிலில் வைத்து, சுவாமி மற்றும் அம்மன் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து புகழ்பெற்ற குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்று, வீதி உலா நடைபெற உள்ளது.

இத்திருவிழாவைக் காணவும் சுவாமி தரிசனம் செய்யவும் நாள்தோறும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகத் திருச்செந்தூர் வருகின்றனர். முருகனுக்குக் காவடி எடுத்தும், பால்குடம் சுமந்தும், வேல் குத்தி பக்திப் பரவசத்துடன் பாட்டுப் பாடி ஆடியும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.

ஜப்பான் பக்தர்கள் சுவாமி தரிசனம் 

இந்த ஆண்டு மாசித் திருவிழாவில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 60 பக்தர்கள் கலந்துகொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பாலகும்பகுருமணி என்பவர் தலைமையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்து திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.

இது குறித்து அவர்களுடன் வந்த பிரதிநிதி கூறுகையில், "இந்த ஆண்டு ஜப்பானில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் தமிழகத்தின் தருமை ஆதீனப் பண்பாட்டைப் பின்பற்றி வருகின்றனர். கடந்த மாதம் தமிழகம் வந்த இவர்கள், பல்வேறு கோயில்களுக்குச் சென்று சிறப்பு யாகங்களைச் செய்துள்ளனர். வெளிநாட்டில் வசித்தாலும் இவர்களுக்குத் தமிழகக் கலாசாரம் மற்றும் பண்பாட்டின் மீது மிகுந்த ஆர்வம் உள்ளது" எனத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory