» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பயிர்கள் அழிப்பு: இழப்பீடு வழங்காத ஸ்பீடு பூமி நிறுவனம் - விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு!

செவ்வாய் 24, பிப்ரவரி 2026 7:54:09 AM (IST)



முடுக்கலாங்குளம் கிராமத்தில் விளைநிலங்களில் இருந்த பயிர்களை இயந்திரங்களைக் கொண்டு அழித்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அடுத்தகட்டமாகப் பெருந்திரள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா, முடுக்கலாங்குளம் கிராமத்தில் விவசாயிகள் பயிரிட்டிருந்த பயிர்களை 'ஸ்பீடு பூமி' (Speed Boomi) என்ற தனியார் நிறுவனம், இயந்திரங்களைக் கொண்டு அதிரடியாக அழித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் கண்டித்து, கடந்த ஜனவரி 26-ஆம் தேதி கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கயத்தாறு வட்டாட்சியர் (தாசில்தார்) முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தச் சமாதானக் கூட்டத்தில், அழிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்குவதாக ஸ்பீடு பூமி நிறுவனம் ஒப்புக்கொண்டது. இருப்பினும், ஒப்பந்தம் செய்யப்பட்டுப் பல நாட்களாகியும் இதுவரை விவசாயிகளுக்கு எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாகத் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களிடம் ஏற்கனவே கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (23-02-2026) தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் நடராஜன், வழக்கறிஞர்கள் பரமசிவம், ரவிக்குமார் மற்றும் சங்கப் பிரதிநிதிகள் திருநெல்வேலியில் உள்ள ஸ்பீடு பூமி அலுவலகத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

இந்த நிறுவனம் தமிழகச் சபாநாயகர் அப்பாவு அவர்களின் மகன் அலெக்ஸ் என்பவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது. "அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்களைச் சபாநாயகரின் மகனே முன்னின்று அழித்தது கண்டிக்கத்தக்கது. அதிகாரத்தைப் பயன்படுத்தி விவசாயிகளை வீதியில் நிறுத்தியுள்ள நிலையில், வட்டாட்சியரும் மௌனம் காப்பது வேதனை அளிக்கிறது," என விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உரிய நீதி கிடைக்காததால், விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்: முதற்கட்டமாக சபாநாயகர் அப்பாவு, அவரது மகன் அலெக்ஸ், வட்டாட்சியர், எம்.பி. கனிமொழி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டுத் தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டுதல், இரண்டாம் கட்டமாக அடுத்த வாரத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் கருப்புக் கொடியேந்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory