» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அண்டை மாநிலங்களும் பாதிக்க கூடாது என்பதே திமுக நிலைப்பாடு : கனிமொழி எம்பி பேட்டி
திங்கள் 3, மார்ச் 2025 3:02:24 PM (IST)

"தமிழ்நாடு மட்டுமல்லாமல் அருகாமையில் உள்ள மாநிலங்கள் எந்த வகையிலும் பாதிக்க கூடாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு" என கனிமொழிக் கருணாநிதி கூறினார்.
தூத்துக்குடியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களை பாதிக்காத வகையில் முக்கியமாக மக்கள் தொகையை கட்டுப்படுத்தி இருக்கக்கூடிய மாநிலங்களை பாதிக்காத வகையில் செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மிக முக்கியமான ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். அதற்காக அனைத்து கட்சி கூட்டத்தையும் அழைத்து இருக்கிறார்கள்.
வராத சில கட்சிகளிடமும் கவுரவம் பார்க்காதீர்கள். இது தமிழ்நாட்டினுடைய நலனை மையமாக கொண்ட ஒரு கூட்டம். அதனால் நம்முடைய உரிமைகளுக்காக நாம் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். அதற்காக தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக தமிழ்நாட்டு நலனை பலி கொடுக்காதீர்கள் என்று கோரிக்கையும் வைத்திருக்கிறார் முதலமைச்சர்.
சமீபத்திலே தமிழ்நாடு வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொகுதி மறு சீரமைப்பு தமிழ்நாட்டுடைய மக்கள் தொகை அடிப்படையிலே நடந்தாலும் அந்த தொகுதி சீரமைப்பிலே தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. எண்ணிக்கையிலே நம்முடைய எம்பி எண்ணிக்கையில் குறையாது என்ற கருத்தை சொல்லி இருந்தார். ஆனால் அது தெளிவை தருவதற்கு பதிலாக பல குழப்பங்களை உருவாக்கி இருக்கிறது.
இதுவரை எடுக்கப்பட்டு இருக்கக்கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தான் ஒவ்வொரு முறையும் டிலிமிடேஷன் மக்கள் தொகை அடிப்படையில் தான் செய்யப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு முறையும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற உணர்வு நாடு முழுவதும் உருவாக்கப்பட்ட பிறகு 71 ஆம் ஆண்டுக்கு பிறகு மக்கள் தொகையை கணக்கெடுப்பு நடத்தவில்லை.
அதன் அடிப்படையிலேயே நடக்கக்கூடிய கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்கள் மக்கள் தொகை குறைப்பை முக்கியமாக எடுத்துக்கொண்டு செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். பல மாநிலங்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மக்கள் தொகையை குறைத்து இருக்கக்கூடிய மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடாது.
இப்போது மறுபடியும் மகளிர் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது அதே தொகுதி மறு சீரமைப்பிற்கு பிறகு செயல்படுத்தப்படும் என்ற கருத்து சொல்லப்பட்டது. ஆனால் பல கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்கக்கூடிய அமைச்சர்கள் மறுசீரமைப்பு பற்றி பலமுறை குறிப்பிட்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலமைச்சர் தமிழ்நாடு பாதிக்க கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி சொல்லி இருக்கிறார்.
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் தமிழ்நாட்டிற்கு வந்து எந்த எண்ணிக்கையும் குறைக்கப்படாது நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய எண்ணிக்கை அதே அளவில் இருந்தாலும் மத்திய மாநிலங்கள் உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் மக்கள் தொகை குறைக்கப்படவில்லை அதனால் அவர்களுக்கு அதிக எண்ணிக்கை தரப்படும் என்றால் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீகார் எல்லாம் எம்பிக்களுடைய எண்ணிக்கை அதிகரிக்கும்.
தமிழ்நாடு, கேரளா ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்கள் மக்கள் தொகை அடிப்படையிலே அவர்களுக்கு எண்ணிக்கை குறைய கூடிய வாய்ப்பு இருக்கிறது. இல்லை என்றால் அதே நிலை இருக்கும் ஆனால் சதவிகிதத்தை எடுத்துக் கொண்டால் இன்று தமிழகத்தின் எம்பிக்களை பொறுத்தவரையில் 543 எம்பிக்களுக்கு 7.18 சதவிகிதம் இருக்கிறோம். ஆனால் இப்படி மாறும் போது ஐந்து சதவீதமாகவோ 5.7 சதவீதமாகவோ குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
அதனால் நாம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறோம். தென் மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். இதைத்தான் நம் முதலமைச்சர் மறுபடியும் மறுபடியும் சொல்லுகிறார் இதற்கு ஒரு தெளிவான பதிலை எட்ட முடியும். அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படும் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்து எது இருக்கிறதோ அதை ஏற்றுக்கொள்வார்கள். முதலில் கருத்து கேட்பு நடத்தப்பட வேண்டும். அதற்கே பல கட்சிகள் வர தயங்குகிறார்கள்
பாஜகவும் அங்கு வந்து தங்களது கருத்துக்களை சொல்லலாம். உள்துறை அமைச்சர் தனியாக பேசினாலும் அரசியல் மேடையில் பேசினாலும் உள்துறை அமைச்சர்தானே அவருடைய கருத்தை தனியார் மேடையில் பேசியதாக எடுத்து கொள்ள கூடாது. திமுகவை பொருத்தவரையில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் அருகாமையில் உள்ள மாநிலங்கள் எந்த வகையிலும் பாதிக்க கூடாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு என கனிமொழி கருணாநிதி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










