» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத்திய அரசின் வேளாண் வரைவுக் கொள்கைக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்: விவசாயிகள் கோரிக்கை!

திங்கள் 3, மார்ச் 2025 12:12:59 PM (IST)



மத்திய அரசு முன்மொழிந்துள்ள "வேளாண் சந்தைப்படுத்துதல்" தேசிய கொள்கை வரைவு திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும் என அகில இந்திய விவசாயிகள் மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக சங்கத்தின் நிர்வாகிகள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், "தமிழ்நாடு உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்திய விவசாய சமூகம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை நாசப்படுத்தும் அபாயகரமான ஒரு தேசிய கொள்கையை ரத்து செய்வதற்கு உதவுமாறு, இந்த வேண்டுகோளை தங்களுக்கு எழுதுகிறோம். 

மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள NPFAM என்ற வேளாண் சந்தைகளுக்கான தேசிய கொள்கை வரைவு திட்டம், தில்லி எல்லைகளில் 13 மாதங்கள் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க விவசாயிகள் இயக்கம் முடிவுக்கு கொண்டுவந்த முந்தைய அரசின் 3 வேளாண் சட்டங்களின் மறு அவதாரமேயாகும். 

இந்த வரைவு திட்டம், முழுமுற்றாக விவசாயத்தை தனியார் பெருநிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு கம்பெனிகளிடம் ஒப்படைக்கும் கொள்கையாக உள்ளது. இது விவசாயத்தை மேம்படுத்தும் மாநில அரசின் பொறுப்பை, உரிமைகளை தட்டிப் பறிக்கிறது. விவசாயிகளின் சுதந்திரமான செயல்பாட்டுக்கும், இருத்தலுக்கும் அச்சுறுத்தல் விடுக்கிறது. 

மேலும் இது, ஏற்கனவே மாநிலத்தில் அமலில் இருக்கும் வேளாண் விளைபொருள் மார்க்கெட்டிங் கமிட்டிகளுக்கு பதிலாக, அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, தனியார் பொதுத்துறை கூட்டு நிறுவனமாக செயல்படும், டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்ட, ஒரு ஒருங்கிணைந்த தேசிய சந்தையை பரிந்துரைக்கிறது. 

இந்த தேசிய கொள்கை திட்டமானது, கார்ப்பரேட் தலைமையிலான உணவு பதப்படுத்துதல் தொழிலுக்கான கொத்து விவசாயத்தை உருவாக்க உழவர் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலமாக ஒப்பந்த விவசாயத்திற்குள் விவசாயிகளை கொண்டு செல்வதுடன், கார்ப்பரேட் கம்பெனிகள் நடத்தும் சில்லறை (Retail) உணவுப் பொருள் அங்காடிகள் மற்றும் உணவு ஏற்றுமதி நிறுவனங்கள் என்ற சிக்கலான வலைக்குள், அனைத்து விவசாயிகளையும் சிக்கவைக்கிறது. 

விவசாயிகளை மென்மேலும் கடன்வலை மற்றும் வறுமைக்குள் தள்ளுவதுடன், அவர்களின் நிலம் மற்றும் சுதந்திரமான சந்தை வாய்ப்புகளிலிருந்து வெளியேற்றும் அபாயத்தையும், இந்த கொள்கை திட்டம் கொண்டுள்ளது. மேலும், இந்த தேசிய கொள்கையானது, வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்குவது அல்லது அரசாங்க கொள்முதல் அல்லது பொதுவிநியோகம் மூலம் உணவுப் பொருள் விநியோகம் செய்வது ஆகியவை பற்றி, எந்தவொரு கருத்தையும் கூறாமல் இருப்பதன் மூலமாக, விவசாயிகள் விரோத தன்மையை வெளிப்படுத்தி உள்ளது. 

இந்திய வாழ்வாதாரத்தைப் விவசாயத்தை, விவசாயிகள் பாதுகாக்க, மத்திய அரசாங்கத்திடம், நீங்கள் இந்தப் பிரச்சினையை வலுவாக எடுத்துச் சொல்ல முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.  எனவே, இந்த மக்கள் விரோத, கார்ப்பரேட் சார்பு கொள்கைக்கு எதிராக, தமிழ்நாடு விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழக முதல்வர் வலுவான குரலை எழுப்புமாறும், தமிழ்நாடு சட்டப்பேரவை மூலமாக, இந்த வேளாண் சந்தைப்படுத்துதல் தேசிய கொள்கை வரைவு அறிக்கையை நிராகரித்து, உடனடியாக மத்திய அரசுக்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory