» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கனிமொழி எம்பி சுற்றுப் பயணம்: அமைச்சர் பி.கீதாஜீவன் அறிக்கை!
ஞாயிறு 2, மார்ச் 2025 9:07:31 PM (IST)
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி வருகின்ற மார்ச் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், தி.மு.க துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் மார்ச் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும் மற்றும் தி.மு.க. தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், விளையாட்டுப்போட்டிகளை துவக்கி வைத்தல் உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள உள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பி.கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், தி.மு.க துணைப் பொதுச் செயலாளருமான திருமிகு.கனிமொழி கருணாநிதி மார்ச் 4ம்தேதி காலை 10 மணிக்கு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் கொடுக்காம்பாறையிலும், காலை 10.30மணிக்கு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் கிழவிப்பட்டி ஊராட்சியிலும் பாராளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.40லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள சமுதாய நலக் கூடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அதன்பிறகு காலை 11 மணிக்கு கீழபாண்டவர் மங்கலம் ஊராட்சியில் பாராளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.35லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப துணை சுகாதார மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். காலை 11.30 மணிக்கு நாலாட்டின்புதூரில் பாராளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக் கடை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.
பிறகு நண்பகல் 12 மணிக்கு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வாகனங்களை வழங்குகிறார். அதே நாள் மாலை 5 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரம் 8 வது வார்டு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
மறுநாள் மார்ச் - 5 ஆம் தேதி காலை 9 மணியளவில் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஏரலில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆரம்பசுகாதார நிலையத்தை சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுடன் திறந்து வைக்கிறார். அதன்பிறகு காலை 11 மணிக்கு தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெறும் புதிய மகளிரணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் அறிமுகக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
அன்றைய தினம் மாலை 4 மணிக்கு விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி - குளத்தூரில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிறுத்தத்தை திறந்து வைக்கும் அவர், பிறகு மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் புதிய நியாயவிலைக்கடை அமைக்கும் பணியைத் துவக்கி வைக்கிறார். அதன்பின் குளத்தூரில் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ஆரம்ப சுகாதர நிலையத்தில் ரூ.90லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வெளிநோயாளிகள் பிரிவு கட்டிடத்தை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.
பின்னர் மாலை 5 மணிக்கு பூசனூரில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடை மற்றும் புதிய பேருந்து நிறுத்தத்தை திறந்து வைக்கிறார். பிறகு அங்கிருந்து விளாத்திகுளம் செல்லும் அவர் அங்கே தமிழ்நாடு முதலமைச்சர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு அம்பாள் மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில் நடைபெறும் மின்னொளி கபாடி போட்டியை துவக்கி வைக்கிறார்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதியை சேர்ந்த கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










