» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை மன்னாரில் அதானி மின் திட்டத்துக்கு நிலம் தர முடியாது: தமிழர்கள் போர்க்கொடி!

வியாழன் 9, மே 2024 10:24:39 AM (IST)

இலங்கை மன்னாரில் அதானி குழுமம் அமைக்கும் மின் திட்டத்துக்கு நிலம் தர முடியாது என ஈழத் தமிழர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இலங்கை மன்னாரில் அதானி குழுமம் காற்றாலை உயர் மின் திட்டம் அமைக்க அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதானி குழுமம் ராட்சத காற்றாலைகளை நிறுவி அதன் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை 20 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. மன்னார் நகரம் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் இந்த மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மன்னாரில் இத்திட்டத்தை செயல்படுத்த தொடர்ந்து தமிழர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ் அடிகளார் கூறியதாவது: மன்னார் அதானி திட்டத்தால் எங்களுக்குப் பேரழிவு ஏற்படும் என பல ஆண்டுகளாக எச்சரித்து வருகிறோம். எங்களது எதிர்ப்பை மீறித்தான் மன்னாரில் அதானி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மன்னாரில் அதானி திட்டம் செயல்படுத்தப்பட்டால் எங்களின் வரலாறும் பண்பாடும் அழிந்து போகும். எங்களின் வாழ்விடங்கள் அழிவுக்குள்ளாக்கப்பட்டு மக்கள் வாழ முடியாமல் வேறிடங்களுக்கு இடம் பெயர நேரிடும். 

மாணவர்கள் கல்வி, எதிர்காலம் அத்தனையுமே பாழாகும். எமது மன்னார் மண் வளம் நிர்மூலமாக்கப்பட்டு நாசமாகிவிடும். மன்னார் நிலத்தில் ஒரு துணைக் கூட அதானி குழுமத்துக்காக நாங்கள் வழங்கவே முடியாது. மன்னார் அதானி திட்டத்துக்கு எதிரான போராட்டங்களைத் தொடங்க போகிறோம். எந்தச் சூழ்நிலையிலும் அதானி திட்டத்தை மன்னார் மண்ணில் அனுமதிக்கவே முடியாது. இவ்வாறு சந்தியோகு மாக்கஸ் அடிகளார் கூறினார்.

மன்னார் பிரதேசத்தின் முக்கியத்துவம் என்ன?: உலக அளவில் பறவைகள் இடம் பெயரும் முக்கியமான 8 இடங்களில் மன்னார் பிரதேசமும் ஒன்று. உலகின் பல பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் பறந்து 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் பறவைகள் மன்னார் வந்து செல்கின்றன. ஒரு ஆண்டுக்கு ஒன்றரை கோடி வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்லக் கூடிய பிரதேசம் மன்னார். 

அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மட்டும் பல லட்சக்கணக்கான பறவைகள் மன்னாரிலேயே தங்கிவிடும். உலக நாடுகளின் பறவைகளின் சொர்க்கம்தான் மன்னார். தமிழர்களின் தாயக நிலப்பரப்பின் பெரும் அங்கமாக இருக்கும் மன்னாரில் தமிழ் மீனவர்கள் அதிகமாக உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரமும் பாதிப்படையும் என்பது தமிழர்களின் எதிர்ப்புக்குக் காரணம்.


மக்கள் கருத்து

சந்திரன்மே 9, 2024 - 10:56:59 AM | Posted IP 172.7*****

இது வீண் கற்பனை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory