» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானில் ஸ்பெயின் சுற்றுலா பயணிகள் 3 பேர் சுட்டுக்கொலை: ஐ.எஸ்., அட்டூழியம்!

ஞாயிறு 19, மே 2024 11:32:08 AM (IST)

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஸ்பெயின் சுற்றுலா பயணிகள் 3 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு முதல் தலீபான்கள் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த நாள் முதல் அவர்களுக்கு எதிராக ஐ.எஸ். பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் தலீபான் அரசுக்கு எதிராக தொடர்ந்து நாசவேலைகளை நடத்தி வருகின்றனர். குறிப்பாக தலீபான்களின் காவல் படை மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு, குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.

இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியிலும் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தானின், பாமியான் மாகாணத்துக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் செல்கின்றனர்.

அங்குள்ள ஹசாரஜாத் பகுதியில் பாமியான் மலைத்தொடரில் அமைந்துள்ள புகழ்பெற்ற புத்தர் சிலைகளில் ஒன்றை கடந்த 2001-ம் ஆண்டு தலீபான்கள் குண்டுவைத்து தகர்த்தெறிந்த நிலையில், மீதமிருக்கும் சிலைகளை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

அந்த வகையில் ஸ்பெயின், நார்வே, ஆஸ்திரேலியா மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பலர் நேற்று முன்தினம் பாமியான் மலைத்தொடரில் உள்ள புத்தர் சிலைகளை சுற்றி பார்த்து கொண்டிருந்தனர். உள்ளூரை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் அவர்களுக்கு அந்த இடத்தை சுற்றி காண்பித்தார்.அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை குறிவைத்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சுற்றுலா பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் பயங்கரவாதிகள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல சுட்டுத்தள்ளினர். இதில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 3 சுற்றுலா பயணிகள் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஸ்பெயின், நார்வே, ஆஸ்திரேலியா மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகளை சேர்ந்த 7 சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் இந்த தாக்குதலை ஐ.எஸ். பயங்கரவாதிகளே நடத்தி இருப்பார்கள் என தலீபான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory