» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தாய்லாந்தில் கடல் மட்டம் அதிகரிப்பதால் தலைநகருக்கு கூடுதல் அச்சுறுத்தல்!
வியாழன் 16, மே 2024 3:36:06 PM (IST)
தாய்லாந்தில் கடல் மட்டம் அதிகரித்து வருவதால் தலைநகரை மாற்றும் நடவடிக்கைகளை பாங்காக் நகர நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது.
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக், கடற்கரையை ஒட்டி தாழ்வான பகுதியில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கினால் அதிகம் பாதிக்கப்படுகிறது. நகரின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கிவிடுகிறது. இது ஒருபுறமிருக்க, காலநிலை மாற்றம் காரணமாக கடல் மட்டம் அதிகரிப்பதால் தலைநகருக்கு கூடுதல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பாங்காக் நகரின் தாழ்வான பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.எனவே, நாட்டின் தலைநகரான பாங்காக்கை இடமாற்றம் செய்வது தொடர்பாக அரசு பரிசீலனை செய்யலாம் என நாட்டின் காலநிலை மாற்ற அலுவலக மூத்த அதிகாரி பவிச் கேசவவோங் கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது:-
பாங்காக் நகரம் அதன் தற்போதைய வெப்பமயமாதல் பாதையில், உலகத்துடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போகலாம். உலகளாவிய வெப்பநிலை, தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருக்கிறது. ஏற்கனவே நாம் (பாங்காக்) அந்த வெப்பநிலையை தாண்டிவிட்டோம்.
இப்போது நாம் திரும்பி வந்து காலநிலை மாற்றத்தின் தாக்கங்களில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து சிந்திக்க வேண்டும். இப்போது உள்ள சூழ்நிலையில் நாம் இருந்தால், பாங்காக் தண்ணீருக்கு அடியில் இருக்கும்.
கடல் நீர் நகருக்குள் வருவதை தடுக்க, நெதர்லாந்தில் பயன்படுத்தப்படுவதைப் போல, தடுப்புகளை அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை பாங்காக் நகர நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது. ஆனால் நாங்கள் வேறு இடத்திற்கு நகர்வதை பற்றி யோசித்து வருகிறோம். இதுதொடர்பான விவாதங்கள் யூகத்தின் அடிப்படையில் நடைபெறுகின்றன. பிரச்சினை மிகவும் சிக்கலானது.
தலைநகரத்தை மாற்றுவது நல்ல தேர்வு என்பது எனது தனிப்பட்ட கருத்து. தலைநகரத்தை அரசாங்க நிர்வாகப் பகுதிகள் மற்றும் வணிக பகுதிகள் என பிரிக்கலாம். பாங்காக் அரசாங்க தலைநகராக இருக்கும். வணிகத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.