» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அகில இந்திய ஹாக்கி போட்டி: நியூடெல்லி அணி சாம்பியன்!!

திங்கள் 29, மே 2023 10:19:53 AM (IST)கோவில்பட்டியில் நடைபெற்ற 12வது அகில இந்திய ஹாக்கி போட்டியில் நியூடெல்லி அணி சாம்பியன் பட்டம் வென்றது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான பன்னிரெண்டாவது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் கடந்த 18ந்தேதி முதல் நடைபெற்று வந்தது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து புகழ்பெற்ற 16 அணிகள் கலந்து கொண்டன. 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளும், காலியிறுதி, அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது. 

இறுதி போட்டிக்கு நியூ டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணியும், செகந்திரபாத், சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியும் தகுதி பெற்றன. இறுதி போட்டியை கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் தலைமையில் இந்திய தேசிய பீல்ட் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனும் அர்ஜுனா விருது பெற்றவருமான முகமது ரியாஸ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அழகிரிசாமி, ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை துவங்கி வைத்தனர்.

இதில் போட்டி தொடங்கியது முதல் இரு அணிகளும் சமபலத்துடன் விளையாடின. போட்டி தொடங்கிய 15வது நிமிடத்தில் நியூடெல்லி அணி தனது முதல் கோலை அடித்தது. 18வது நிமிடத்தில் செகந்திராபாத் அணி பதில் கோல் அடித்தது. இதையெடுத்து நியூடெல்லி அணி வீரர்கள் மிகுந்த ஆக்ரோஷத்துடன் ஆடி ஆட்டத்தின் 29, 48வது நிமிடத்தில் கோல்கள் அடித்தனர். இறுதியில் 3 - 1 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

முன்னதாக 3, 4 இடங்களுக்கான போட்டியில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், நியூடெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணியும் மோதின. இதில் ஷீட் அவுட் முறையில் 5 - 4 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வெற்றி பெற்றது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதலிடம் பெற்ற நியூ டெல்லி, பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணிக்கு இலட்சுமி அம்மாள் அகில இந்திய நினைவு ஹாக்கி கோப்பை மற்றும் ரூ.1,00,000-க்கான ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 

இரண்டாமிடம் பெற்ற செகந்திரபாத், சவுத் சென்ட்ரல் ரயில்வே அணிக்கு ரூ.75,000- ரொக்கப் பரிசு, மூன்றாமிடம் பெற்ற நியூ டெல்லி, பஞ்சாப் நேஷனல் பேங்க் அணிக்கு ரூ.50,000-க்கான ரொக்கப் பரிசு, நான்காமிடம் பெற்ற நியூ டெல்லி, காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணிக்கு ரூ.30,000-க்கான ரொக்கப் பரிசு மற்றும் நினைவு கோப்பை வழங்கபட்டது. மேலும் காலுறுதிப் போட்டியில் விளையாடிய கோவில்பட்டி - ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆப் எக்ஸலன்ஸ் எஸ்டிஏடி அணி, சென்னை - இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் அணி, பெங்களூரு - கனரா பேங்க் அணி, சென்னை - ஜிஎஸ்டி & சென்ட்ரல் எக்ஸைஸ் அணி ஆகிய அணிகளுக்கு ஆறுதல் ரொக்கப் பரிசாக தலா ரூ.20,000 வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜு, கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சி.சங்கரநாராயணன், நிர்வாக குழு உறுப்பினர்கள் சென்னம்மாள், ஷண்மதி, சி.ராமசாமி, நேஷனல் பொறியியல் கல்லூரியின் முதல்வர் கே.காளிதாஸ முருகவேல், கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் எஸ்.மதிவண்ணன், ஆடிட்டர் பாலசுப்பிரமணி, வழக்கறிஞர் சம்பத்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் கே.பி.ராஜகோபால், காங்கிரஸ் கட்சி நிர்வாகி திருப்பதி ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். 

முன்னதாக நேஷனல் பொறியியல் கல்லூரியின் இயக்குனர் எஸ்.சண்முகவேல் வரவேற்றார். நிறைவாக இலட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் எ.ராஜேஸ்வரன் நன்றி கூறினார். போட்டிக்கான ஏற்பாடுகளை கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர், தாளாளர், இயக்குனர் மற்றும் முதல்வர்கள் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குநர்கள் கே.ரகு, முனைவர் ஆர்.ராம்குமார் மற்றும் முனைவர் ஆர்.சிவராஜ், ஹாக்கி பயிற்சியாளர்கள், அனைத்து துறைப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory