» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு!

வியாழன் 16, மே 2024 12:51:14 PM (IST)

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். 

இது குறித்து தனது எக்ஸ் தள கணக்கில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எதிர்வரும் ஜூன் 6-ம் தேதி அன்று நடைபெற உள்ள குவைத் அணியுடனான பிஃபா உலகக் கோப்பை தகுதிப் போட்டி தனது கடைசி சர்வதேச போட்டி என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய கால்பந்து அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் (150 போட்டிகள்) மற்றும் அதிக கோல்கள் (94 கோல்கள்) பதிவு செய்த வீரராக சுனில் சேத்ரி திகழ்கிறார். 39 வயதான அவர், கடந்த 2005 முதல் இந்திய சீனியர் கால்பந்து அணியில் விளையாடி வருகிறார்.

"நாட்டுக்காக நான் முதல் முறையாக களம் கண்ட அந்த நாளை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. அதற்கு முந்தைய நாளே நான் ஆடுவது குறித்த அறிவிப்பை எனது முதல் தேசிய அணி பயிற்சியாளர் ஸுகி சார் சொல்லியிருந்தார். அப்போது எனக்குள் ஏற்பட்ட எண்ண ஓட்டங்களை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. அந்த முதல் நாள் எனது பயணத்தில் சிறப்பான நாள். அறிமுக போட்டியில் கோல் பதிவு செய்திருந்தேன்.

இந்த 19 ஆண்டுகளில் நான் இத்தனை ஆட்டங்கள் ஆடியுள்ளேன், பல சாதனைகள் செய்துள்ளேன் என தனியொரு நபராக எண்ணியதில்லை. இருந்தாலும் கடந்த சில மாதங்களாக எனது இறுதிப் போட்டியை எதிர்நோக்கி இருந்தேன். இதுதான் நான் கடைசியாக ஆடப் போகும் ஆட்டம் என எனக்குள் நானே சொல்லிக் கொண்ட அந்த தருணத்தின் போது பலவற்றையும் எண்ணி பார்த்தேன்.

சக அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், போட்டிகள் என அனைத்தும் நினைவலைகளில் வந்து செல்கின்றன. எனது ஓய்வு முடிவை வீட்டில் அப்பா, அம்மா மற்றும் மனைவி வசம் தான் முதலில் தெரிவித்தேன். இதுதான் எனது கடைசிப் போட்டி என எனது உள்ளுணர்வு சொல்லியது. நீண்ட யோசனைக்கு பிறகு அதை முடிவு செய்து விட்டேன்” என அவர் அந்த வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கால்பந்து அரங்கில் தேசிய அணிக்காக ஆடி அதிக கோல்கள் பதிவு செய்த வீரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் சுனில் சேத்ரி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory