» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஏமனில் தூத்துக்குடி மாலுமி நிஷாந்த் மரணம் : ரூ.1 கோடி நிவாரணம் இழப்பீடு வழங்க சிஐடியு வலியுறுத்தல்!

செவ்வாய் 16, ஜூன் 2026 5:15:35 PM (IST)

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா ஏற்படுத்தியுள்ள யுத்த நெருக்கடியால் உயிரிழந்த இந்திய மாலுமிகளுக்குத் தலா 5 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க சர்வதேச மன்றங்களில் இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச கடல் வழித்தடத்தில் பயணித்த கப்பலில் உரிய மருத்துவ உதவி கிடைக்காமல் தூத்துக்குடியைச் சேர்ந்த இளம் மாலுமி நிஷாந்த் உயிரிழந்த சம்பவத்திற்குச் சிஐடியு தொழிற்சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலையும், கப்பல் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கிற்குத் தனது கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து சிஐடியு தூத்துக்குடி மாவட்டக் குழு சார்பில் அவசரத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மான விபரங்கள் வருமாறு:

ஏமன் கடலில் பயணித்துக் கொண்டிருந்த ‘எம்.டி செலஸ்டியஸ்’ வணிகக் கப்பலில் இரண்டாம் நிலை அலுவலராகப் பணியாற்றி வந்தவர் தூத்துக்குடியைச் சேர்ந்த இளம் மாலுமி நிஷாந்த். கடந்த ஜூன் 11 அன்று அவர் திடீரென சுகவீனமடைந்து உயிருக்குப் போராடிய நிலையில், அவசரக் கால மருத்துவ உதவி கேட்டு கப்பலில் இருந்து திரும்பத் திரும்ப வேண்டுகோள் விடுத்துள்ளார். 

எனினும், எவ்வித மருத்துவ உதவியும் கிடைக்காததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தேவையான மருத்துவ உதவி வழங்காமல் மாலுமியின் மரணத்திற்குக் காரணமானதோடு, அவரது உடலை உரிய முறையில் பாதுகாத்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பொறுப்பையும் கைவிட்ட கப்பல் நிர்வாகத்தின் மனிதநேயமற்ற செயல் உலக அளவில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் யுத்தப் பதற்றம் காரணமாக, உலகின் 20 சதவீத எண்ணெய் வர்த்தக வழியான ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 3 இந்திய எண்ணெய் டேங்கர் கப்பல்கள் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டு 3 இந்திய மாலுமிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் போர்க்கப்பல்களும் இந்த ஆபத்தான நிலைக்கு உதவ முன்வராதது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிஐடியு முன்வைக்கும் முக்கியக் கோரிக்கைகள்:

மாலுமி நிஷாந்த் இறந்து 4 நாட்கள் கடந்த பின்பும் அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகள் தாமதமாகி வருகின்றன. தற்போது ஏமனில் உள்ளதாகக் கூறப்படும் அவரது உடலைத் துபாயில் உள்ள இந்தியத் தூதரகம் மூலமாக விரைந்து மீட்டு, இறுதிச் சடங்கிற்காகத் தூத்துக்குடியில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க மத்திய அரசு தூதரக நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்.

மாலுமியை இழந்து நிராதரவாக நிற்கும் அவரது வயது முதிர்ந்த பெற்றோர், மனைவி, இரண்டு வயது மகள் மற்றும் 8 மாதக் கைக்குழந்தை கொண்ட குடும்பத்தைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், தமிழக முதல்வர் இக்குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதுடன், நிஷாந்தின் மனைவியின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும்.

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா ஏற்படுத்தியுள்ள யுத்த நெருக்கடியால் உயிரிழந்த இந்திய மாலுமிகளுக்குத் தலா 5 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க சர்வதேச மன்றங்களில் இந்தியா வலியுறுத்த வேண்டும்.

மாலுமியின் மரணத்தில் உள்ள அலட்சியப் போக்கு குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தி, 'எம்.டி செலஸ்டியஸ்' கப்பல் நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிஷாந்தின் உடலை மீட்கத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இந்திய பார்வேர்ட் சீமேன் யூனியன் (FSUI) பொதுச்செயலாளர் மனோஜ் யாதவிற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகச் சிஐடியு தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஆர்.ரசூல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory