» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போதை மறுவாழ்வு மையத்திலிருந்து திரும்பிய வாலிபர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை!

செவ்வாய் 16, ஜூன் 2026 11:35:59 AM (IST)

தூத்துக்குடி அருகே போதை மறுவாழ்வு மையத்திலிருந்து வீடு திரும்பிய வாலிபர் நிலையில் கடுமையான வயிற்று வலி காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள காமராஜ் தெரு, பட்டாண்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் தாவீது. இவரது மகன் செல்வகுமார் (32). தொழிலாளியான இவர் கடந்த 10 வருடங்களாகத் தீவிர மதுப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்து வந்துள்ளார். இவரை மதுப் பழக்கத்திலிருந்து மீட்க அவரது மனைவி சுகந்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 13ஆம் தேதி புதுக்கோட்டை தேரிரோடு பல்க் எதிரே செயல்பட்டு வரும் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காகச் செல்வகுமாரை அவரது மனைவி சுகந்தி சேர்த்துள்ளார். அங்கு அவருக்குச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று (ஜூன் 15) செல்வகுமாருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாக மறுவாழ்வு மைய நிர்வாகத்தினர் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், இன்று (ஜூன் 16) அதிகாலை 3:30 மணியளவில் செல்வகுமாருக்கு மீண்டும் மிக அதிகப்படியான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், செல்வகுமாரின் இதயத்துடிப்பு மிகவும் குறைவாக இருப்பதை அறிந்து, உடனடியாகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலமாகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே செல்வகுமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த அவசரப் பிரிவு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர். இச்சம்பவம் குறித்துத் தூத்துக்குடி அரசு மருத்துவமனை அளித்த தகவலின் பேரில், சாயர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து வாலிபரின் மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory