» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அனுமதியின்றி இயங்கும் பெந்தேகோஸ்தே சபை : தமிழக முதல்வரிடம் இந்து முன்னணி புகார்!

செவ்வாய் 16, ஜூன் 2026 4:42:47 PM (IST)

தூத்துக்குடியில் எவ்வித அனுமதியும் இன்றி, இடியும் நிலையில் உள்ள பழமையான கட்டடத்தில் இயங்கி வரும் பெந்தேகோஸ்தே சபை மீது உரிய நடவடிக்கை எடுத்து, அதன் மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் தமிழக முதல்வருக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாகத் தூத்துக்குடி மாநகர மாவட்ட இந்து முன்னணி தலைவர் எஸ்.இசக்கிமுத்து குமார், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள புகார்க் கடிதத்தில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி நகர்ப் பகுதியில் உள்ள காரப்பேட்டை மேல்நிலைப் பள்ளிக்கு மேற்புறம், பீச் ரோட்டில் அமைந்துள்ள இந்திராகாந்தி சிலையின் மேற்புறம் உள்ள மதுராகேட்சின் குடோனில் எவ்வித அனுமதியும் இல்லாமல் மிக பிரமாண்டமான முறையில் பெந்தேகோஸ்தே சபையின் கிளை உருவாக்கப்பட்டுள்ளது. பழைய காலத்துக் கட்டடமான இதில் எவ்விதப் பராமரிப்புப் பணிகளும் செய்யாமல் சுமார் 3,000 பேர் வரை அமரக்கூடிய அளவில் இந்தச் சபை நடத்தப்பட்டு வருகிறது.

சுமார் 120 ஆண்டுகள் பழமையான இக்கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும், கடல் காற்று பட்டு அரித்துப்போயிருந்த இக்கட்டடத்தின் வெளிப்புறத்தை, அதன் ஆபத்து தெரியாதவாறு வெள்ளையடித்து மறைத்துள்ளனர். ஆபத்து காலங்களில் இங்குத் தீயணைப்பு வண்டியோ அல்லது ஆம்புலன்ஸோ உள்ளே சென்று வர முடியாத அளவுக்கு முறையான சாலை வசதிகளும் இல்லை.

இத்தகைய சூழலில், மேற்படி சபையை நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி எதுவும் பெறப்படவில்லை. மதத்தை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில், சட்டவிரோதமாக மதம் மாற்றும் சபையாக இது தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இடியும் நிலை கட்டடம் ஒருவேளை இடிந்து விழுந்தால், அங்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிருக்கு அது பெரும் பாதிப்பாக அமைந்துவிடும்.

எனவே, தமிழக அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு, எவ்வித அனுமதியும் இன்றிச் சபையை நடத்தி வரும் பொறுப்பாளர்களை அழைத்து விசாரணை செய்ய வேண்டும். அங்குள்ள மின் இணைப்பை உடனடியாகத் துண்டிப்பதுடன், உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory