» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிஆர்ஓக்கள் பணியிட மாற்றத்தில் பெரும் குளறுபடி: தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!

செவ்வாய் 16, ஜூன் 2026 3:11:09 PM (IST)

தமிழகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் (PRO) பணியிட மாற்ற உத்தரவை மதிக்காமல், புதிய பொறுப்புகளை ஏற்கத் தாமதிக்கும் அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகம் முழுவதிலும் உள்ள 36 மாவட்டங்களில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நிர்வாகக் காரணங்களுக்காக அண்மையில் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த உத்தரவைத் தொடர்ந்து, சில மாவட்டங்களில் இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் தங்களின் புதிய பொறுப்புகளை உடனடியாக ஏற்றுக்கொண்டனர்.

ஆனால், சில மாவட்டங்களைச் சேர்ந்த பிஆர்ஓக்கள் இன்னும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய இடங்களுக்குச் சென்று பதவி ஏற்காமல், பழைய இடங்களிலேயே தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக, தூத்துக்குடி மாவட்ட பிஆர்ஓவாகப் பணிபுரிந்து வந்த நவீன் பாண்டியன், தனக்குப் பணிமாறுதல் வழங்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

மறுபுறம், தென்காசி போன்ற சில மாவட்டங்களில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் பிஆர்ஓக்கள் இடமாற்றம் செய்யப்படுவது அந்தந்த மாவட்டங்களில் உள்ள செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவை மதிக்காமல், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் புதிய இடங்களுக்குச் செல்லாமல் பழைய இடங்களிலேயே பிஆர்ஓக்கள் நீடிப்பது பல்வேறு முறைகேடுகளுக்கும், லஞ்சம் மற்றும் ஊழலுக்கும் வழிவகுக்கும். எனவே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசின் உத்தரவை மதிக்காமல் தன்னிச்சையாகப் பழைய இடங்களிலேயே தொடர்ந்து நீடித்து வரும் அதிகாரிகள் யார் யார் என்பது குறித்த முழுமையான ஆதாரப்பூர்வ விபரங்களைத் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் மிக விரைவில் திரட்டி, மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களிடம் நேரில் ஒப்படைக்க உள்ளதாகத் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory