» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக்கில் 5¾ கிலோ கஞ்சா கடத்தல்: 3 வாலிபர்கள் கைது!

செவ்வாய் 16, ஜூன் 2026 8:41:09 AM (IST)



பெரியதாழையிலிருந்து மணப்பாடு கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் 5¾ கிலோ கஞ்சா பொட்டலங்களைக் கடத்திச் சென்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையிலிருந்து மோட்டார் சைக்கிள் மூலமாகச் சிலர் கஞ்சா கடத்தி வருவதாகக் குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, குலசேகரன்பட்டினம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் முகேஷ் அரவிந்த், எபனேசர் மற்றும் போலீசார் நேற்று மணப்பாடு புதுக்குடியேற்றம் பேருந்து நிறுத்தப் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 3 வாலிபர்கள், தூரத்தில் போலீசாரைக் பார்த்தவுடன் வாகனத்தைத் திருப்பித் தப்பியோட முயன்றனர். இதனால் உஷாரான போலீசார், அந்த மோட்டார் சைக்கிளைத் துரத்திச் சென்று தடுத்து நிறுத்தி, 3 வாலிபர்களையும் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த சாக்குப்பையைச் சோதனை செய்தபோது, அதற்குள் 5¾ கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகும். இதனைத் தொடர்ந்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளைப் பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் முத்தம்மாள்புரம் முத்துலிங்கம் மகன் சுரேந்திரன் (29), உடன்குடி கோட்டவிளை செல்வமுத்து மகன் முத்துராஜ் என்ற சியான் (31), தாமரைமொழி வள்ளுவர் தெரு முருகன் மகன் செல்வமதன் (28) என்பது தெரியவந்தது.

மேலும், இந்த கஞ்சா பொட்டலங்களைத் தோப்பூரைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவரிடமிருந்து வாங்கியதாகவும், பெரியதாழையிலிருந்து மணப்பாட்டிற்கு கடத்திச் சென்று சில்லறை விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும் கைதான வாலிபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும், இவர்களுக்குக் கஞ்சா சப்ளை செய்த தோப்பூரைச் சேர்ந்த முக்கியப் புள்ளியைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory