» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஓமன் நாட்டில் தூத்துக்குடி கப்பல் மாலுமி மர்ம மரணம் : உடலை மீட்கக் கோரி மனைவி கண்ணீர் மனு!
சனி 13, ஜூன் 2026 8:22:15 AM (IST)
ஓமன் நாட்டுக் கப்பலில் மாலுமியாகப் பணியாற்றி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், அவரது உடலை மீட்டுத் தரக் கோரி அவரது மனைவி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார்.
தூத்துக்குடி குரூஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகக் கப்பலில் மாலுமியாகப் பணியாற்றி வந்தார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஓமன் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் மூலம், "எம்.டி. செலஸ்டியல்" என்ற கப்பலில் பணியில் சேர்ந்தார்.கடந்த சில நாட்களாக இந்தக் கப்பல் ஓமன் நாட்டுத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூன் 5-ஆம் தேதி நிஷாந்த் தனது மனைவி சராபின் மற்றும் குடும்பத்தினருடன் கைப்பேசி மூலம் வழக்கம்போல் பேசியுள்ளார்.
இதற்கிடையே, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சராபின் தனது கணவரைத் தொடர்புகொள்ள முயன்றபோது கைப்பேசி இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், கப்பல் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு கேட்டுள்ளார். அப்போது அவர்கள், நிஷாந்துக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் மீண்டும் அந்த நிறுவனத்தைத் தொடர்புகொள்ள முயன்றபோது முறையான தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், கப்பல் மாலுமிகளுக்கான சமூக வலைதளக் குழு மூலம் நிஷாந்த் உயிரிழந்துவிட்டதாகக் குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
கணவரின் மரணச் செய்தியால் அதிர்ச்சியடைந்த சராபின், தனது கணவரின் மரணம் குறித்துத் தனக்கு உரிய தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும், மரணத்திற்கான உண்மையான காரணம் மூடி மறைக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு அளித்தார்.
மனு அளித்த பின்னர் சராபின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை என் கணவர் என்னுடன் நன்றாகத்தான் பேசினார். தற்போது அவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது. அவரது உடலை உடனடியாக மீட்டுச் சொந்த ஊருக்குக் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது மரணத்திற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
எங்களுக்கு 10 மாத ஆண் குழந்தையும், 4 வயது பெண் குழந்தையும் உள்ளனர். எனவே, எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திடமிருந்து உரிய இழப்பீடு பெற்றுத் தரத் தமிழக அரசு, மத்திய வெளிவிவகாரத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கிடையே, கப்பல் மாலுமிகள் சங்கம் சார்பிலும் நிஷாந்தின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தவும், அவரது குடும்பத்திற்குத் தேவையான நிவாரணம் மற்றும் இழப்பீடுகளைப் பெற்றுத் தரவும் தூதரக ரீதியாகத் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதலமைச்சர் மாநில இளைஞர் விருக்கு ஜூலை 6-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:30:21 PM (IST)

தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழா!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:07:20 PM (IST)

போதை மறுவாழ்வு மையத்திலிருந்து திரும்பிய வாலிபர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை!
செவ்வாய் 16, ஜூன் 2026 11:35:59 AM (IST)

தூத்துக்குடியில் பைக் எரிப்பு: போலீஸ் விசாரணை!
செவ்வாய் 16, ஜூன் 2026 10:37:03 AM (IST)

தசரா திருவிழாவில் சினிமா ஆடல், பாடல்களுக்கு முற்றிலும் தடை: கோவில் நிர்வாகம் எச்சரிக்கை!
செவ்வாய் 16, ஜூன் 2026 8:52:01 AM (IST)

தூத்துக்குடி விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ்: பயணிகளுக்குத் உற்சாக வரவேற்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 8:48:43 AM (IST)









