» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அமைச்சர் ஸ்ரீநாத் வளர்ச்சியைப் பொறுக்காமல் அவதூறா? பாண்டியாபதி சங்கம் கண்டனம்!

திங்கள் 8, ஜூன் 2026 3:14:03 PM (IST)



பரதவர் குல அமைச்சர் ஸ்ரீநாத் வளர்ச்சியைப் பொறுக்காமல் அவர் மீது திமுக முன்னாள் அமைச்சர் தேவையற்ற அவதூறு கருத்துக்களை திட்டமிட்டுப் பரப்பி வருவதாக பாண்டியாபதி சங்கம்  கண்டனம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி பாண்டியாபதி பரதவர் நல தலைமைச் சங்கம் சார்பில், ஐந்து மாவட்ட பரதர் ஊர்நலக் கமிட்டி நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இக்கூட்டத்தைத் தொடர்ந்து, தமிழக மீன்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மீனவ மக்களின் வாழ்வாதார உரிமைகள் குறித்த முக்கியக் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் அருகில் அமைந்துள்ள பாண்டியாபதி பரதவர் நல தலைமைச் சங்க அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஜே.எம்.ஜே. அந்தோணிசாமியின் மேலான ஆலோசனையின் பேரில், பொதுச் செயலாளர் இன்னாசி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பரதர் ஊர்நலக் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

கூட்டத்தின் விபரங்கள் குறித்துச் சென்னை பிரவீன் குமார் மற்றும் பொதுச் செயலாளர் இன்னாசி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூட்டாகக் கூறியதாவது: "தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியான 14 மாவட்டங்களில் வசித்து வரும் பின்தங்கிய மீனவ மக்களின் தொழில் பாதுகாப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதார உரிமைகள் அடங்கிய பல்வேறு முக்கியக் கோரிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகைக்கு நேரில் சென்று, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்தைச் சந்தித்துப் பாண்டியாபதி பரதர் நல தலைமைச் சங்க நிர்வாகிகள் சார்பில் விரிவான கோரிக்கை மனுவை அளித்தோம். மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் ஸ்ரீநாத், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்தவுடன் 14 கடலோர மாவட்டங்களுக்கும் நேரில் வருகை தந்து, மீனவ மக்களைச் சந்தித்துக் கோரிக்கைகளை முழுமையாக ஆய்வு செய்து, அவற்றுக்கு விரைந்து தீர்வுகாண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்." என்றனர்.

தொடர்ந்து அவர்கள் பேசுகையில், "கடந்த வாரம் புன்னக்காயல் மீனவக் கிராமத்தில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஸ்ரீநாத் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சி குறித்துத் தூத்துக்குடியைச் சேர்ந்த முன்னாள் திமுக அமைச்சர் ஒருவர், உள்நோக்கத்துடன் அமைச்சர் ஸ்ரீநாத் மீது தேவையற்ற அவதூறு கருத்துக்களைச் சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டுப் பரப்பி வருகிறார்.

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு பரதவர் குல மக்களுக்குத் தற்போதைய அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவப் பங்கு கிடைத்துள்ளது. அதுவும் எங்களின் மிக முக்கியக் கோரிக்கையான மீன்வளத்துறையை, பரதவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதற்குக் காரணமாய் இருந்த முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு இந்தத் தருணத்தில் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தேர்தலில் அமைச்சர் ஸ்ரீநாத்திடம் வெற்றி வாய்ப்பை இழந்த விரக்தியில், அவரது வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் முன்னாள் திமுக அமைச்சர் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருவதை பாண்டியாபதி பரதர் நல தலைமைச் சங்கம் சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்." என்று தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கூத்தன்குழி வளன் சந்திரா, திருநெல்வேலி பிரகாஷ், தூத்துக்குடி ஜான் பெர்னான்டோ, மயிலாடுதுறை செந்தில்குமார், சேலம் எடப்பாடி ராஜாளி பக்தன், தமிழ்ச்செல்வன், பாம்பன் பெர்னிக்ட், சிங்கித்துறை அகஸ்டின், இன்னாசி, கொற்கை ஜெவி மற்றும் பாண்டியாபதி பரதவர் நல தலைமைச் சங்க நிர்வாகிகள் ஜான் டில்டன், வினோத், ரவின்டோ, ஜெகன் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த முக்கியப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

SivasriJun 8, 2026 - 05:19:25 PM | Posted IP 162.1*****

ஓட்டப்பந்தயம் நடக்கிறது.அதில்5பேர் பங்கேற்பு வெற்றி பெற்றோர்க்கு கோப்பை அதில் மீதி 4 பேர் இல்லை அவர்கள் ஓடியது தவறு.அப்படி சொன்னால் நடக்குமா.இல்லை 4பேர் அடுத்த முறை எப்படி கோப்பை பெறலாம் மக்கள் கை தட்டல்களை பெற முயற்சி செய்வர் அது போல் அவர் வென்றுள்ளார்.அதற்காக அவரை குறை சொல்வது தவறு.அடுத்த ஆயத்தத்தை தயார் செய்வது முறை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory