» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:36:14 AM (IST)



தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சியில் அமைந்துள்ள மிகவும் பழமையான நல்லாண்பிள்ளை பெற்ற குணவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, 14 ஆண்டுகளுக்குப் பிறகு விமரிசையாக நடைபெற்றது.

தாமிரபரணி ஆறு வடக்கிலிருந்து தெற்காகப் பாயும் 'தட்சிண கங்கை' திருத்தலமான இங்கு, அம்மன் வடக்கு நோக்கி வீற்றிருக்கிறார். வடக்கிலிருந்து ஓடி வரும் தாமிரபரணி அன்னை, அம்பாளைத் தரிசித்துச் செல்வது இத்தலத்தின் ஐதீகமாகும். இதனால் ஆன்மீகப் பெரியோர்களால் இந்த ஆலயம் தாமிரபரணி நதிக்கரையின் மிக முக்கியத் தலமாகக் கருதப்படுகிறது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 21-ஆம் தேதி காலை யாகசாலை பூஜைகள் தொடங்கின. மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோ-பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து மூன்று நாட்களாக நான்கு கால யாகசாலை பூஜைகள் மற்றும் எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் 23-ஆம் தேதி காலை நடைபெற்றது. காலை 10:00 மணிக்கு யாத்ரா தானம் மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, 10:15 மணிக்கு மேல் குணவதி அம்மன் திருக்கோயில் விமான கோபுர கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.நண்பகல் மகா அபிஷேகம் மற்றும் விசேஷ அலங்கார தீபாராதனையைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது.

செல்வம் பட்டர் என்ற கல்யாண சுந்தர சிவாச்சாரியார் தலைமையில் பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்த ஜன சபா முன்னாள் தலைவர் ராமசுப்பிரமணிய ஐயர், பெங்களூரு பால சீனிவாசன், திருச்செந்தூர் கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள், ஓய்வுபெற்ற சப்-கலெக்டர் வரதராஜன், ஓய்வுபெற்ற நீதிபதி ராமலிங்கம், கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மற்றும் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளைப் பக்த ஜன சபா தலைவர் விஸ்வநாதன், செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் ஸ்ரீதர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory