» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரூ.110.66 கோடி நலத்திட்ட உதவிகள் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சனி 7, மார்ச் 2026 5:16:41 PM (IST)

தூத்துக்குடியில் 3,958 பயனாளிகளுக்கு ரூ.110.66 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (07.03.2026) தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு, முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "தொழில் வளர்ச்சியில் சென்னையுடன் போட்டி போடும் அளவிற்குத் தூத்துக்குடி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த வளர்ச்சிக்குக் காரணம் உங்களுடைய உழைப்பும் ஒற்றுமையும் தான். இன்று தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்றால் அதற்கு மகளிர்தான் காரணம்.
தமிழக முதல்வரின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளோம். தேர்தலைக் காரணம் காட்டி சிலர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தியாவே வியக்கும் வண்ணம் மகளிர் வங்கிக் கணக்கில் (தொகையைச்) செலுத்தியவர் முதல்வர். இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.
பட்டா வழங்கும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மீனவ கிராமங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளார். மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரணத் தொகையை ஐந்தாயிரத்திலிருந்து எட்டாயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளோம். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மக்களுக்குமான 'ஆல் ரவுண்டர்' ஆட்சியாக நமது திராவிட மாடல் ஆட்சி உள்ளது" என்றார்.
விழாவில், சுமார் ரூ.177.70 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.136.35 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம். ரூ.38.53 கோடியில் கட்டப்பட்ட மகப்பேறு, குழந்தைகள் நலப்பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு ஆகிய 4 முக்கியத் திட்டப்பணிகளைத் துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும், எட்டயபுரம் பாரதியார் நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் படர்ந்தபுளி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலா ரூ.1.41 கோடியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு வளாகத்தைப் புனரமைக்க ரூ.4 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
1,755 பேருக்கு ரூ.40.09 கோடியில் கணினி இ-பட்டாக்கள், 1,800 பயனாளிகளுக்கு ரூ.63 கோடியில் வீடு கட்டும் ஆணைகள், சர்வதேச வீராங்கனை முத்துமீனாவிற்கு ரூ.12 லட்சம் ஊக்கத்தொகை மற்றும் 15 வீரர்களுக்கு மருத்துவக் காப்பீடு, 51 பேருக்கு ரூ.53.58 லட்சம் மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் தையல் இயந்திரங்கள் என மொத்தம் 3,958 பயனாளிகளுக்கு ரூ.110.66 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி. கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சி. சண்முகையா, ஜி.வி. மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், மேயர் பெ. ஜெகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
சனி 7, மார்ச் 2026 4:52:06 PM (IST)

துணை முதல்வர் முன்னிலையிலேயே ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய மாற்றுத்திறனாளி இளைஞர்!
சனி 7, மார்ச் 2026 4:00:56 PM (IST)

வீட்டுமனைப் பட்டா வழங்காததைக் கண்டித்து தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு
சனி 7, மார்ச் 2026 3:23:06 PM (IST)

விளாத்திகுளம் தொகுதி: திமுக சார்பில் போட்டியிட எஸ்.எஸ்.ரவி விருப்பமனுத் தாக்கல்!
சனி 7, மார்ச் 2026 3:13:00 PM (IST)

சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளோம் - உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
சனி 7, மார்ச் 2026 12:31:36 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா
சனி 7, மார்ச் 2026 12:04:40 PM (IST)







