» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அதிமுகவின் பிரச்சனைகளுக்கு தி.மு.க.வின் தூண்டுதலே காரணம்: நயினார் நாகேந்திரன் பேட்டி!

செவ்வாய் 9, செப்டம்பர் 2025 4:40:23 PM (IST)

அதிமுகவின் எல்லா பிரச்சனைகளும் தி.மு.க.வின் தூண்டுதலே காரணம் என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். 

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் என தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். அதன்படி பணி நிரந்தரம் கோரி அவர்கள் போராட்டம் நடத்தினர். 

பா.ஜ.க.வை சேர்ந்த வேலூர் இப்ராகிம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்த நடைமுறைகளை அறிந்து கொள்வதற்காக ஒரு மருத்துவமனைக்கு சென்றார். அவர் போராட்டம் நடத்தவில்லை. ஆனால் அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளர். போராடுபவர்களையும், கேள்வி கேட்பவர்களையும் நசுக்கும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு முன்னர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்று வந்தபோது அதுகுறித்து வெள்ளை அறிக்கை கேட்டோம். ஆனால் அவர்கள் அதனை வெளியிடவில்லை. தற்போது முதலமைச்சர் வெளிநாடு சென்று வந்தது குறித்து இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிடப்படவில்லை. ஆளுங்கட்சியால் தொடர்ந்து மிரட்டல்கள் நடந்து வருகிறது.

குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் தமிழரான தற்போது மகாராஷ்டிர கவர்னராக உள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார். மத்திய பா.ஜ.க. அரசு கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆனால் காங்கிரஸ் நாட்டை துண்டாட நினைக்கிறது. காங்கிரஸ் ஆட்சியின்போது பல மாநிலங்களில் ஆட்சியை கலைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நீங்கள் செங்கோட்டையனை சந்திப்பீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், செங்கோட்டையன் எங்களது கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வை சேர்ந்தவர். அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிப்பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி உத்தரவிட்டுள்ளார். எங்களது விருப்பம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான். ஆனாலும் அ.தி.மு.க. பொறுப்பில் இருந்து நீக்கியவர்களை நாங்கள் உடனடியாக சந்திக்க முடியாது என்றார்.

பின்னர் செங்கோட்டையனை பின்னால் இருந்து தூண்டுவது பா.ஜ.க.தான் என்றும், அ.தி.மு.க.வை உடைக்க பா.ஜ.க. முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, தி.மு.க.வின் தூண்டுதலின் பேரிலேயே எல்லா பிரச்சனைகளும் நடக்கிறது. எல்லா பின்னணிக்கும் தி.மு.க. அரசாங்கம்தான் காரணம் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory