» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)



தூத்துக்குடி அருகே தெய்வச்செயல்புரத்தில் உள்ள விசுவரூப சுந்தர வரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் தெய்வச்செயல்புரத்தில் விசுவரூப சுந்தர வரத ஆஞ்சநேயர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் 77 அடி உயர விசுவரூப ஆஞ்சநேயர் கம்பீரமாக பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டு இருக்கிறார். இந்த ஆஞ்சநேயருக்கு தனிச்சிறப்பு உண்டு. இலங்கையில் ராவணனின் பிடியில் இருந்து சீதையை மீட்பதற்காக ராமர் படையெடுத்து சென்றார். அங்கு நடந்த போரின் போது, லட்சுமணன் மூர்ச்சையாகினார். இதனால் அவரை உயிர்ப்பிக்க வீர ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கி வந்தார். அவர் மலையை தூக்கி வந்த போது, மலையில் இருந்த சிறு சிறு கற்கள் 6 இடங்களில் விழுந்தன. அந்த இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் விசுவரூப தரிசனத்தில் காட்சி அளித்து வருவதாகவும், இந்த கற்கள் விழுந்த இடங்கள் சிறிய மலைக்குன்றாக காட்சி அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி நாமக்கல், சுசீந்திரம் தாணுமலை, சென்னை பரங்கிமலை, திண்டுக்கல் சின்னாளம்பட்டி, தூத்துக்குடி தெய்வச்செயல்புரம், இலங்கை ஆகிய இடங்களில் இந்த 6 கோவில்கள் அமைந்து உள்ளன. இந்த கோவில்களில் மட்டுமே ஆஞ்சநேயர் விசுவரூபத்தில் காட்சி அளிக்கிறார். இந்த 6 இடங்களிலும் ஆஞ்சநேயர் மலையை நோக்கி நிற்பது போன்று சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. நவகைலாயம், நவதிருப்பதி போன்று இந்த 6 ஆஞ்சநேயர் கோவில்களும் அமைந்து உள்ளன. 6 கோவில்களிலும், தூத்துக்குடி அருகே தெய்வச்செயல்புரத்தில் அமைந்து உள்ள 77 அடி உயர ஆஞ்சநேயர் உயரமானவர் ஆவார். இவர் வல்லநாடு மலையை நோக்கி காட்சி அளித்து கொண்டு இருக்கிறார். இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமண தடை நீங்கும், கல்வி அபிவிருத்தி, செல்வம் பெருகும், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இங்கு நேற்று அனுமன்ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலையில் பஞ்சசுத்த ஹோமம், சுதர்சனஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், ஆஞ்சநேயர் சிறப்பு பூஜைகள் நடந்தன. விசுவரூப ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, துளசி மாலை, வடைமாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு, கனி அலங்காரம் உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. கோவிலில் நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் அனுமனை வழிபட்டு சென்றனர். பக்தர்களுக்கு வடை உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ராஜேசுவரி, பொருளாளர் வக்கீல் சண்முகசுந்தரம், அர்ச்சகர் சீனிவாசன் அய்யர் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory