» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாணவர்களை உயர்கல்வி சேர்ப்பதில் 100 சதவீதம் இலக்கை நோக்கி ஓடுகிறோம்: ஆட்சியர் பேச்சு!

செவ்வாய் 9, செப்டம்பர் 2025 3:14:27 PM (IST)



மாணவர்களை உயர்கல்வி பயில சேர்ப்பதில் 100 சதவீதம் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பேசினார். 

துத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியன்பட்டிணம், புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளியில் இன்று (09.09.2025) நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கலந்து கொண்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்ததாவது : நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்து வருகைபுரிந்துள்ள அனைவருக்கும் இனிய காலை வணக்கம்! நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இந்த வழிகாட்டும் நிகழ்ச்சியாக நமது மாவட்டத்தில் மூன்றாவது நாளாக நடைபெறுகிறது. கடந்த 5 மாதங்களாக, மே மாதத்தின் தொடக்கத்திலிருந்து செப்டம்பர் மாதத்தின் முதல் வாரம் வரை தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் செய்து நமது மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு முடித்து தேர்ச்சி பெற்ற 92 சதவீதத்திற்கு மேற்பட்ட மாணவர்களை உயர்கல்வி பயிலுவதற்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

நமது மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்கல்வி பயிலுவதற்கு அதிக மாணவர்களை சேர்க்கை செய்து சாதனை படைக்க பேரூதவியாக இருந்த பள்ளியின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித்துறையின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செயல்படும் கட்டுப்பாட்டு அறையின் ஆசிரியர்கள் உள்ளிட்ட மிகப்பெரிய குழு இதற்காக முழுமையாக அயராது உழைத்து இதுபோன்ற மாபெரும் இலக்கை அடைவதற்கு செயல்பட்டுள்ளனர். 

நமது இலக்கு என்பது நமது மாவட்டத்தில் பயின்ற அனைத்து மாணவர்களையும் அதாவது 100 சதவீதம் உயர்கல்வி பயிலுவதற்கு சேர்க்க வேண்டும் என்பதாகும். அதில் நாம் 92 சதவீதம் இலக்கை அடைந்துள்ளோம். மீதமுள்ள 8 சதவீதம் மாணவர்களையும் கண்டறிந்து அவர்களையும் உயர்கல்வியில் சேர்த்து நமது இலக்கை விரைவில் அடைவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களின் மூலமாக படிக்கின்ற ஒவ்வொரு மாணவர்களுக்கும் உயர்கல்வி பயிலுவதற்கு எந்தவொரு தடையும் இருக்கக்கூடாது என்பதற்காக பல திட்டங்களின் வாயிலாக பல வழிகாட்டுதல்களையும், நிதியுதவிகளையும், வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது. 

இந்த வாய்ப்புகளை எல்லாம் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அவ்வாறு இந்த வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்துவதில் ஏதேனும் சிக்கல்கள் இருக்கின்றதா என்பதை கண்டறிந்து, ஒவ்வொரு மாணவர்களுக்கும் உரிய வழிகாட்டுதல்களை நமது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இதுபோன்று ஒவ்வொரு மாணவர்களுக்கும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்குவதால் மாநிலத்திற்கே முன்னுதாரணமாக நமது மாவட்டத்தின் கட்டுப்பாட்டு அறை திகழ்ந்து வருகிறது. 

கட்டுப்பாட்டு அறையில் தொடர்ந்து உழைக்கக்கூடிய ஆசிரியர்களுக்கும், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமல்லாது பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர்கள் ஒத்துழைப்பு நல்கியதால்தான் இந்த அளவிலான சாதனைகளை எட்டியிருக்கிறோம். மாணவர்களை உயர்கல்வி பயில சேர்ப்பதில் 100 சதவீதம் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம்.
அதில் நாம் 92 சதவீதம் இலக்கை அடைந்துள்ளோம். மீதமுள்ள இலக்கை அடைவதற்கு விரைவில் முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால், உயர்கல்வியில் சேர்வதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவடைந்து கொண்டிருகிறது. இன்னும் ஓரிரு வாரத்தில் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை நிறைவடையவுள்ளது. ஓரிரு வாரத்திற்குள் மாணவர்கள் உயர்கல்வி பயிலுவதற்கு கல்லூரிகளில் சேர வேண்டும். 

கல்லூரிகளில் சேர முடியாத மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கான பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து, குறிப்பாக பொருளாதார பிரச்சனை உள்ளிட்ட சிக்கல்களை முழுமையாக தீர்ப்பதற்கு நாம் பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறோம். நமது மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எனது தலைமையில் நானே கல்வி கட்டணத்தை செலுத்தி அதன்மூலம் படித்து வருகின்றனர். எனவே, எந்தவொரு மாணவரும் பொருளாதார சூழ்நிலை காரணமாக படிக்க இயலவில்லை என்ற நிலை ஏற்படக்கூடாது. குறிப்பாக மாணவர்கள் எந்தவகை படிப்பை படிக்க விரும்புகின்றனர் அதற்கான வழிவகைகள் என்ன என்பதை வழிகாட்டுவதற்காகதான் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 

கல்லூரிகளில் பணிபுரிகின்ற பேராசிரியர்களும் ஒவ்வொரு முகாமிற்கும் வருகைதந்து தங்கள் கல்லூரிகளில் என்னென்ன படிப்புகள் உள்ளது அது படித்தால் என்னென்ன வாய்ப்புகள் உள்ளது? என்பதை மாணவர்களுக்கு எடுத்துக்கூறி Spot Admission செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சில கல்லூரிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை செலுத்துவதற்கும் பல்வேறு வகைகளில் உதவிகள் மற்றும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். 

அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களை உயர்கல்வியில் சேர்ப்பதற்கு பெருமுயற்சிகளை எடுத்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு, மாணவ மாணவியர்கள் உயர்கல்வி பயிலுவதற்கு புதுமைப்பெண், தமிழ்புதல்வன் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கி வருகிறது. எனவே, மாணவ மாணவியர்கள் அனைத்து திட்டங்களையும் பயன்படுத்திக் கொண்டு உயர்கல்வியில் சேர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்கள். 

இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ்ராம், முதன்மை கல்வி அலுவலர் (பொ) து.சிதம்பரநாதன், உதவி இயக்குநர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஏஞ்சலின், உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பேச்சியம்மாள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory