» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ் மண்ணில் சீக்கிய புரட்சியை கொண்டு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஜதெதார் குல்தீப் சிங் பேட்டி

செவ்வாய் 9, செப்டம்பர் 2025 10:23:31 AM (IST)



சீக்கியம் என்பது வெறும் மத நம்பிக்கை அல்ல; அது அன்பின், சமத்துவத்தின், நீதியின் புரட்சி. அந்தப் புரட்சியை இப்போது தமிழ் மண்ணில் கொண்டு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என ஸ்ரீ அகல் தக்த் சாஹிப் ஜதெதார் சிங் சாஹிப் குல்தீப் சிங் தெரிவித்தார். 

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "500 ஆண்டுகளுக்கு முன்பு, சீக்கிய மதத்தின் நிறுவனர் குருநானக் தேவ் ஜி, தூத்துக்குடி மண்ணில் கால் பதித்தார். இங்கிருந்து அவர் பண்டைய துறைமுகம் வழியாக இலங்கைக்குப் பயணித்து, இக் ஓங்கார் என்ற ஒரே இறைவனின் நித்திய செய்தியையும், சமத்துவம், அன்பு, சகோதரத்துவம் என்ற மனிதகுலப் பொக்கிஷங்களையும் பிரசாரம் செய்தார்.

சீக்கிய மதத்தில் சங்கத் – பங்கத் என்பது மிக முக்கியமான கொள்கை. குருநானக் சாஹிப் சொல்லியது: ‘பங்கத்தில் உட்கார்ந்து, பாகுபாடின்றி ஒன்றாகச் சாப்பிடுபவர்கள் மட்டுமே உண்மையான சங்கத்தில் பங்கு பெறுவர்.’ குருவின் இல்லத்தில் சாதி இல்லை, பாலின வேறுபாடு இல்லை, இனம், மொழி, அந்தஸ்து என்ற பாகுபாடே இல்லை. வாகேகுருவின் முன் அனைவரும் சமம்.

பத்தாவது குரு குரு கோவிந்த் சிங் ஜி, 1699 ஆம் ஆண்டு ஆனந்த்பூர் சாஹிப் நகரில் கல்சா பந்த்-ஐ உருவாக்கி சாதியென்ற கொடிய விஷத்தை முற்றிலும் ஒழித்தார். தாழ்த்தப்பட்டோர் எனக் கருதப்பட்டவர்களை அவர் கல்சாவாக உயர்த்தினார். பஞ்ச் பியாரே – ஐந்து அன்பர்களை ஒரே கிண்ணத்தில் இருந்து அமிர்தம் குடிக்க வைத்தார். இதன் மூலம் உலகுக்கு அவர் அறிவித்தார்: ‘மனஸ் கி ஜாத் சபே ஏக் ஹை பெஹ்சான்போ’ – மனித குலம் அனைத்தும் ஒரே இனமாகும்.

இன்று தமிழ்நாட்டில் நிகழும் சாதியடிப்படையிலான அட்டூழியங்கள், கௌரவக் கொலைகள், தீண்டாமை, பாகுபாடுகள் அனைத்துக்கும் முடிவு காண வேண்டுமெனில், குரு நானக், குரு கோவிந்த் சிங் மற்றும் சீக்கிய குருக்களின் போதனைகள் மக்கள் மத்தியில் வீரியத்துடன் பரவ வேண்டும். இந்த சமூக நோய்க்கான ஒரே மருந்து குருவின் அன்பே.

தமிழ்நாட்டில் இன்று அன்பின் பற்றாக்குறைதான் பல தீமைகளுக்கு மூல காரணம். குருநானக் தேவ் ஜி கற்பித்த ப்ரேம் (அன்பு) செய்தியை எங்களோடு கொண்டு வந்துள்ளோம். சமூகத்தை இரக்கத்துடனும் நீதியுடனும் மாற்றுவதற்காகவே நாங்கள் வந்திருக்கிறோம்.

குருநானக் சாஹிபின் பயணங்களின் உணர்வோடு, சீக்கிய வரலாறும் தத்துவமும் தென்னிந்திய மக்களிடையே பரவுவதற்கான பணியைத் தொடங்கியுள்ளோம். விரைவில், தென்னிந்தியாவின் அனைத்து முக்கிய மொழிகளிலும் சீக்கிய தத்துவத்தை விளக்கும் ஒரு நூலை வெளியிடவுள்ளோம்.

தமிழ் சீக்கியர்களின் பங்களிப்பு எங்களுக்கு பெரும் ஊக்கமும் ஆற்றலையும் தந்துள்ளது. குறிப்பாக சர்தார் ஜீவன் சிங் ஜியின் அர்ப்பணிப்பான பணிகள், முழு சீக்கிய சமுதாயத்திற்கும் நீதி மற்றும் சமத்துவத்தின் பணி மீண்டும் நினைவூட்டியுள்ளன.

500 ஆண்டுகளுக்கு முன்பு குருநானக் சாஹிப் சமூக நீதிக்கான அடித்தளத்தை அமைத்தார். பின்னர், ஒன்பதாவது குரு குரு தேக் பகதூர் ஜி, மதச்சுதந்திரத்திற்காகவும் மனித கண்ணியத்திற்காகவும் 1675-ல் தில்லியில் தனது உயிரைத் தியாகம் செய்தார். இந்த நவம்பரில், அவரது 350வது ஷஹீதி குருபுரப் உலகளவில் சிறப்பாக அனுசரிக்கப்படும்.

சீக்கியம் என்பது வெறும் மத நம்பிக்கை அல்ல; அது அன்பின், சமத்துவத்தின், நீதியின் புரட்சி. அந்தப் புரட்சியை இப்போது தமிழ்மண்ணில் கொண்டு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory