» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:24:03 AM (IST)



ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நேற்று மாசித்திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள நவதிருப்பதி தலங்களில், 9-வது கோவிலான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில், கடந்த 9-ந் தேதி மாசித் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை காட்டப்பட்டு வந்தது. தினமும் காலை, மாலையில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 13-ந் தேதி கருட சேவை நடைபெற்றது.

திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு விஸ்வரூபம், காலை 5.30 மணிக்கு திருமஞ்சனம், காலை 6 மணிக்கு தீர்த்த விநியோகம், கோஷ்டி நடைபெற்றன. காலை 7.45 மணிக்கு சுவாமி நம்மாழ்வார் திருத்தேரில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து தீபாராதனைக்கு பிறகு தேரை பக்தர்கள் கோவிந்தா கோபாலா என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து தேர் நிலையம் வந்தடைந்தது.

பத்தாம் திருவிழாவான இன்று(செவ்வாய்க்கிழமை) இரவில் பெருமாள் தெப்ப உற்சவம் நடக்கிறது. சுவாமி பொலிந்து நின்ற பிரான் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நாளை(புதன்கிழமை) இரவில் சுவாமி நம்மாழ்வார் ஆச்சாரியார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலிக்கிறார். வருகிற 20-ந்தேதி மாசி தீர்த்தவாரி நடைபெருகிறது. 

விழாவின் நிறைவு நாளான வருகிற 21-ந் தேதி காலையில் சுவாமி நம்மாழ்வார் இரட்டை திருப்பதி கோவிலில் எழுந்தருளி திருமஞ்சனம் கோஷ்டி, சாத்துமுறைக்கு பின் இரவு பல்லக்கில் ஆழ்வார்திருநகரி எழுந்தருளுகிறார். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory