» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : அதிகாரிகளின் சொத்துகளை கணக்கெடுக்க உச்சநீதிமன்றம் தடை!

சனி 3, ஆகஸ்ட் 2024 10:35:59 AM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய அதிகாரிகளின் சொத்து விவரங்களை கணக்கெடுக்கும்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது. இதனை எதிர்த்த வழக்கில், துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை கணக்கெடுக்கும்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு தடை கேட்டு தூத்துக்குடி நில எடுப்பு தாசில்தார் சந்திரன், சிப்காட் டாஸ்மாக் டெப்போ மேலாளர் கண்ணன், தூத்துக்குடி மண்டல துணை தாசில்தார் சேகர் சார்பில் எம்.எப்.ஹனீஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளான சைலேஷ் குமார் யாதவ், கபில் குமார் கே.சரத்கர், மகேந்திரன், டி.எஸ்.பி.க்கள் பி.லிங்கத்திருமாறன், டி.பார்த்திபன், திருமலை, இன்ஸ்பெக்டர் ஹரிகரன், ஏட்டுகள் ராஜா, தாண்டவமூர்த்தி, மதிவாணன், எம்.கண்ணன், எம்.சங்கர், சதீஷ்குமார், சுடலைக்கண்ணு, ஏ.ராஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சொர்ண மணி, எம்.ரென்னிஸ் சார்பில் வக்கீல் ஜாக்ரதி சிங் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது போலீஸ் அதிகாரிகள் சார்பில் வக்கீல் பி.பாலாஜியுடன் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜராகி, ‘ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டதால் இந்த விவகாரம் பந்தாடப்படுகிறது. இதை அனுமதிக்க முடியாது. போராட்டக்காரர்கள் போலீசாரை தாக்கியுள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்த வழக்கில் இந்த உத்தரவை சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்துள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை எப்படி விசாரணையை புதிதாக தொடங்க முடியும்?. தொடக்கத்தில் உள்ளூர் போலீசாரை நம்ப முடியாது என தெரிவித்து, சி.பி.ஐ.யிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. தற்போது சொத்து விவரங்களை திரட்ட தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வழக்கை ஒப்படைத்துள்ளது. போராட்டம் 99 நாட்கள் கடந்து 100-வது நாள் வந்தபோது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை முடிவு மனுதாரர்களுக்கு சாதகமாக உள்ளது.

குறிப்பாக போலீசார் தனித்துவிடப்பட்டதாகவும், தாக்கப்பட்டதாகவும் தேசிய மனித உரிமை ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரை விட போராட்டக்காரர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது’ என வாதிட்டார்.

நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் முடிவுகள் குறித்தும், ஆணையத்தின் அறிக்கை சட்டமன்ற ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது குறித்தும் கேட்டபோது, மூத்த வக்கீல் கபில் சிபல், ‘நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரையின் படி, போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.

அப்போது, ‘தேசிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கையை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளனர். அதற்குமேல் ஒன்றுமில்லை தானே’ என தலைமை நீதிபதி மீண்டும் கேட்டார். அதற்கு மூத்த வக்கீல் கபில் சிபல் ‘ஆம்’ என்று தெரிவித்ததுடன், ‘ஐகோர்ட்டின் உத்தரவை மீண்டும் குறிப்பிட்டு வருவாய், போலீஸ் அதிகாரிகளை இவ்வாறு நடத்துவது நியாயமல்ல’ என வாதிட்டார்.

வாதங்களை பதிவுகளை கொண்ட உச்சநீதிமன்றம், ‘துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை கணக்கிடுமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

மேலும் மேல்முறையீட்டு மனுக்களுக்கு 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழ்நாடு அரசு மற்றும் எதிர்மனுதாரர்களான மனித உரிமை ஆர்வலர் என்ட்ரி டிபேன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த அர்ஜூனன் உள்ளிடடோருக்கு உத்தரவிட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory