» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக அரசின் சாதனைகள் மீது சோஃபா மாடல் அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது: உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

வெள்ளி 12, ஜூன் 2026 4:19:26 PM (IST)

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில், முந்தைய திமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டுவிட்டு, தற்போதைய முதல்வர் அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி வருவதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் போலி கதைகளை (Fake Narratives) உருவாக்கிய இன்றைய முதல்வர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்துள்ளார்."

"இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகத் தமிழ்நாடு திகழ்கிறது; இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 விழுக்காடு (சதவிகிதம்) மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்; பெண் கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் வளர்ச்சி என்றெல்லாம் முதல்வர் பேசியுள்ளார். இவை அனைத்தும் அவருடைய ஒரு மாத கால ‘சோஃபா மாடல்’ ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, ஐந்து ஆண்டுகாலத் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா? என்பதை முதல்வர் விளக்க வேண்டும்."

"தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும்தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது டெல்லிக்குச் சென்று நீட் விலக்கு கோரி, அவரே முன்பு பேசியதற்கு அவரே மறுப்பு தெரிவித்துள்ளார். டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக் கட்சியிடமோ மேகேதாட்டு அணைப் பிரச்சினை பற்றி வாய் திறக்காமல், 'நமக்கெதுக்கு வம்பு' என்று அமைதியாகத் திரும்பி வந்துள்ளார்."

"மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது இந்த சோஃபா மாடல் அரசு. பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி, மக்களை ஏமாற்றி நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது சி.எம். சார். உண்மை நிச்சயம் வெல்லும்," என உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் சாடியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory