» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாத்தூரில் பிரம்மாண்ட புத்தகத் திருவிழா தொடக்கம்: 1 லட்சம் புத்தகங்கள் குவிப்பு!

சனி 4, ஏப்ரல் 2026 4:39:29 PM (IST)



வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், சாத்தூரில் 10,000 தலைப்புகளில் ஒரு லட்சம் புத்தகங்களுடன் கூடிய பிரம்மாண்ட புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது.

தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் ஜே.சி.ஐ சாத்தூர் மேட்சஸ் சிட்டி ஆகியவை இணைந்து நடத்தும் இந்தப் புத்தகத் திருவிழா, சாத்தூர் கே.ஏ.பி. பால் நாடார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இதன் தொடக்க விழாவிற்கு த.மு.எ.க.ச. கிளைத் தலைவர் ப்ரியா கார்த்திக் தலைமை வகித்தார். புத்தக விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் ரவிவர்மா, முத்து முருகன், கார்த்திக், ரமேஷ், ராஜபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் விஸ்வநாத் வரவேற்புரையாற்றினார்.

சாத்தூர் தொழிலதிபர் எம்.ஏ.சி.எஸ். ரவீந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நாடாவினை வெட்டிப் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்தார். முதல் விற்பனையை நகர்மன்றத் தலைவர் குருசாமி தொடங்கி வைத்தார்.

சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருதாளர் எழுத்தாளர் உதயசங்கர் கலந்துகொண்டு குழந்தைகளுக்குப் புத்தகங்களை வழங்கினார். அப்போது பேசிய அவர், "குழந்தைகளிடம் கதைகளைச் சொல்லி வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவது அவசியம்" என வலியுறுத்தினார்.

கலை, இலக்கியம், அறிவியல், நாவல், வாழ்க்கை வரலாறு, மருத்துவம் மற்றும் போட்டித் தேர்வு நூல்கள் என 10,000 தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. விற்பனை செய்யப்படும் அனைத்துப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களில் தினசரி ஒரு நபர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படவுள்ளன.

ஏப்ரல் 3-ம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சி, ஏப்ரல் 15-ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் எழுத்தாளர் லட்சுமணபெருமாள், மருத்துவர் வெண்மணி, நூலகர் ராதா மற்றும் பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவாக ஆசிரியர் முத்துக்குமார் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory