» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்த பாமக : 10 தொகுதிகள் ஒதுக்கீடு

செவ்வாய் 19, மார்ச் 2024 10:22:27 AM (IST)



மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்த பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

பாமக - பாஜக இடையிலான கூட்டணி குறித்து இறுதி முடிவை எடுப்பதற்காக திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக உயர்நிலை குழு ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, வடக்கு மண்டல இணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி,வழக்கறிஞர் கே.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில், தீவிர ஆலோசனைக்கு பிறகு, பாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று (மார்ச் 19) காலை தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்த்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வருகை தந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த ஆலோசனையில் முடிவில் பாஜக - பாமக இடையிலான கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் 10 தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், "10 ஆண்டு காலமாக பாட்டாளி மக்கள் கட்சி டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருந்து வருகிறது. வருகிற மக்களவைத் தேர்தலை தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து சந்திக்க கட்சி முடிவு செய்திருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடரவும், தமிழ்நாட்டில் மாற்றங்கள் வருவதற்காகவும் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். 60 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பான சூழல் இருக்கிறது. ஒரு மாற்றம் வரவேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாக இருக்கிறது. அதை பூர்த்தி செய்யவே இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.

எங்கள் கூட்டணி, தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுக்க மிகப்பெரிய வெற்றி பெறும். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நிச்சயமாக தேர்ந்தெடுக்கப்படுவார்” என்று அன்புமணி கூறினார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "தமிழகத்தின் மக்கள் சக்தியாக, தனிப்பெரும் அரசியல் இயக்கமாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி மிக முக்கியமான ஒரு முடிவை எடுத்து பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தியிருக்கிறது. மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400க்கும் அதிகமான சீட்களில் வெற்றிபெற வேண்டும் என்று ஒரு வேள்வியுடன் பாமக களமிறங்கியிருக்கிறது.

தமிழகத்தின், இந்தியாவின் தனிப்பெரும் அரசியல் தலைவராக திகழும் ராமதாஸுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களின் அன்பை பெற்றவர் ராமதாஸ். தமிழகத்தில் புரட்சிகரமான அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பது அவரது மிகப்பெரிய கனவு.

ராமதாஸ் யோசித்துக் கொண்டிருக்கும் பல விஷயங்களை பிரதமர் மோடி நாடு முழுவதும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். 2024 மக்களவை தேர்தலில் மக்கள் வெற்றியை கொடுப்பார்கள் என்ற முழு நம்பிக்கையுடன் களத்தில் இறங்கியிருக்கிறோம். தமிழகத்தின் அரசியல் நேற்று இரவில் இருந்து மாறியிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி எடுத்துள்ள இந்த முடிவு தமிழக அரசியலை முற்றிலுமாக மாற்றி இருக்கிறது.

2024-ல் மாபெரும் வெற்றி, 2026-ல் நாம் அனைவரும் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம். நாங்கள் இரவோடு இரவாக கோவையிலிருந்து இங்கு வந்ததற்கு காரணம், இன்று சேலத்தில் பிரதமர் மோடியுடன் ராம்தாஸை அமரவைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசைதான்” என்று அண்ணாமலை பேசினார்.

எந்தெந்த தொகுதிகள், வேட்பாளர்கள் யார் என்ற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. பாஜக - பாமக கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், சேலத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அன்புமணியும் பங்கேற்கிறார்.

முன்னதாக, தமிழகத்தின் வடமாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கி வைத்துள்ள பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுகவும், பாஜகவும் தீவிர முயற்சி மேற்கொண்டன.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கடந்த முறை போலவே 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதற்கிடையே, அன்புமணியிடம் பேச்சுவார்த்தை நடத்திய பாஜக மேலிட பொறுப்பாளர்களான வி.கே.சிங், கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் 10 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாகவும், மீண்டும் ஆட்சி அமைந்த பிறகு மத்திய அமைச்சர் பதவி பற்றி பேசி முடிவு செய்வதாகவும் உறுதி அளித்தனர்.

இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில், பாமக எந்த பக்கம் நகரும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது பாஜக - பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory