» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஏர்போர்ட் அருகே ரூ.100 கோடி அரசு தரிசு நிலம் ஆக்கிரமிப்பு: நீதிபதியிடம் மனு அளிக்கப் பொதுமக்கள் முடிவு!

சனி 25, ஜூலை 2026 8:39:53 AM (IST)

LandAirport.jpg

தூத்துக்குடி விமான நிலையம் அருகே உள்ள ரூ.100 கோடி மதிப்பிலான அரசு தரிசு நிலத்தை மீட்கக் கடந்த 4 ஆண்டுகளாகப் போராடியும் நடவடிக்கை எடுக்காததால், முதன்மை மாவட்ட நீதிபதியிடம் விரிவான மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில், விமான நிலையம் அருகே புல எண்கள் 37 மற்றும் 136-ல் சுமார் ரூ.100 கோடி மதிப்புடைய அரசு தரிசு நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் சார் ஆட்சியர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் தொடர் மனுக்கள், மேல்முறையீடுகள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு வந்தன.

மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட கூடுதல் நடுவர் கடந்த 12.03.2026 அன்று பிறப்பித்த செயல்முறை ஆணையில், சம்பந்தப்பட்ட நிலம் பழைய வருவாய் பதிவுகளில் "அரசு தரிசு" என இருந்ததாகவும், பின்னர் அது தனியார் பட்டாவாக மாற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த பட்டா மாற்றத்திற்கான முக்கிய ஆதார ஆவணங்களோ அல்லது "டி.சி.1/93" தொடர்புடைய பதிவுகளோ கிடைக்கவில்லை என்றும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சார் ஆட்சியர் நடத்திய விசாரணைக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட போலி பட்டாக்களை ரத்து செய்து, நிலத்தை மீண்டும் அரசு தரிசு நிலமாக மாற்றப் பரிந்துரை செய்திருந்தார். இருப்பினும், இதுவரை பட்டா ரத்து செய்யப்படவோ அல்லது நிலத்தை மீட்கும் நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை.

மாவட்ட வருவாய் அலுவலரின் ஆணையில், இப் பிரச்சனைக்கு உரிமையியல் (சிவில்) நீதிமன்றத்தை அணுகுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு நிலத்தைப் பாதுகாக்கப் போராடும் சாதாரணப் பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாய் செலவழித்துச் சிவில் வழக்கு தொடரும் பொருளாதார வசதி இல்லை.

இதன் காரணமாக, சட்டப் போராட்டத்திற்குத் தேவையான நிதியைப் பொதுமக்களிடம் பிச்சை எடுத்துச் சேகரிக்க அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், அதற்கும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

இது குறித்து முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "முந்தைய சார் ஆட்சியர்கள் காலத்தில் இந்த மனுக்களைத் தொடர்ந்து எடுத்துச் சென்றபோது, ஒரு பெண்ணாகத் தாம் மிகுந்த மன உளைச்சலையும் அவமானகரமான அனுபவங்களையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது குறித்துக் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் தற்போதைய நிலை பற்றியும் எந்தத் தகவலும் இல்லை.

அரசு நிலத்தைப் பாதுகாப்பது அரசின் முதன்மைக் கடமை. ஆனால், அந்தப் பொறுப்பை நிறைவேற்றக் கோரி 4 ஆண்டுகளாக அரசு அலுவலகங்களைச் சுற்றி வர வேண்டியுள்ளது. இது எனது தனிப்பட்ட பிரச்சனை அல்ல; பொதுச் சொத்தைப் பாதுகாக்கும் பொதுநலப் போராட்டம்" எனத் தெரிவித்துள்ளார்.

அரசு நிர்வாகம் மற்றும் ஊடகங்கள் வாயிலாகத் தமிழ்நாடு அரசின் கவனத்திற்குப் பலமுறை கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், அரசு தரிசு நிலத்தைப் பாதுகாக்கவும், ஆவண முறைகேடுகளை முழுமையாக ஆய்வு செய்யவும் கோரி, பொதுமக்கள் சார்பில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியிடம் விரைவில் விரிவான மனு அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory