» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பயிர் காப்பீட்டுத் தொகையாக ரூ.37.22 கோடி விடுவிப்பு : விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்!

வியாழன் 25, ஜூன் 2026 4:36:23 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் 2024-2025ஆம் ஆண்டில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரை மொத்தம் ரூ.37.22 கோடி காப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், விவாசயிகள் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ஜூன் 1 முதல் இதுநாள் வரை 6.29 மி.மீ மழை பதிவாகியுள்ளது, இது இயல்பான அளவை விட 0.19 மி.மீ அதிகமாகும். ஜூன் 24 நிலவரப்படி, பாபநாசம் அணையின் நீர்மட்டம் 94.70 அடியாகவும் (கொள்ளளவு 143 அடி), மணிமுத்தாறு அணை 75.90 அடியாகவும் (கொள்ளளவு 118 அடி), சேர்வலாறு அணை 92.42 அடியாகவும் உள்ளது.

நெல் சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டம்:

டெல்டா அல்லாத இதர மாவட்டங்களுக்கான கார் / குறுவை / சொர்ணவாரி நெல் சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ், இயந்திர நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பிற்காக ஏக்கருக்கு ரூ.4,217.6 மானியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டம் ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், கருங்குளம், திருவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் வட்டாரங்களில் 1000 ஏக்கர் இலக்குடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பயிர் காப்பீட்டுத் திட்ட விபரங்கள்:

2024-2025ஆம் ஆண்டில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரை மொத்தம் ரூ.37.22 கோடி காப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், தோட்டக்கலைத்துறை சார்பில் 2024-2025ஆம் ஆண்டிற்குரிய கொத்தமல்லி பயிருக்கு ரூ.30.43 லட்சமும், வெங்காயப் பயிருக்கு ரூ.33.71 லட்சமும், சிவப்பு மிளகாய்க்கு ரூ.452.39 லட்சமும் விடுவிக்கப்பட்டுள்ளது. 2023-2024ஆம் ஆண்டிற்கான வேளாண் காப்பீட்டுத் தொகை எதுவும் நிலுவையில் இல்லை.

இலவச மரக்கன்றுகள் மற்றும் வண்டல் மண்:

தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான பல்லுயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்குத் தேக்கு, செம்மரம், சந்தனம் உள்ளிட்ட 2,20,000 பணம் தரும் மரக்கன்றுகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளன. செப்டம்பர் 2026 பருவமழைக் காலத்தில் இவை நடவு செய்யப்படும். மேலும், மண்வளத்தை மேம்படுத்த மாவட்டத்தில் உள்ள 877 குளங்களில் இருந்து கட்டணமின்றி வண்டல் மண் எடுத்துக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.

இலவச பண்ணைக் குட்டைகள் திட்டம்:

மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகச் சமூக பங்களிப்பு நிதி (CSR Fund) உதவியுடன் மானாவாரி வட்டாரங்களில் 1000 பண்ணைக் குட்டைகள் இலவசமாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் விபரங்களுடன் அந்தந்த வட்டார வேளாண் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநர்களை அணுகலாம் என ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory