» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் தொடரும் சாலை விபத்துக்கள் : பல்வேறு அமைப்புகள் திரண்டு போராட்டம்!

வெள்ளி 19, ஜூன் 2026 4:57:45 PM (IST)



கோவில்பட்டி பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பு சம்பவங்களைத் தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாகக் கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் அவர்கள் அதிகாரிகளிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் வருமாறு: கோவில்பட்டி நகரின் முக்கியச் சாலைகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனடியாக முறைப்படுத்த வேண்டும். சாலையின் இருமருங்கிலும் வெள்ளைக் கோடு அமைத்து, அதைக் கடந்து வாகனங்கள் வராதவாறு நிறுத்தச் செய்ய வேண்டும்.

விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் பழுதான நிலையில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை உடனடியாகப் பழுதுநீக்கம் செய்த பின்னரே இயக்க வேண்டும். நகர எல்லைக்குள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமாகச் செல்லும் மினி பஸ்களுக்கு அபராதம் விதித்துக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிகள் தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த உரியக் காவலர்களை நியமிக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் பள்ளி மாணவர்கள் மற்றும் வாலிபர்கள் இரண்டு பேருக்கு மேல் செல்வதைத் தடுத்து நிறுத்தி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இதனைப் போக்குவரத்துப் போலீசார் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

கோவில்பட்டியில் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, போக்குவரத்துப் போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத் துறை, சிற்றுந்து மற்றும் பேருந்து உரிமையாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொள்ளும் கூட்டு ஆலோசனைக் கூட்டத்தைக் கோவில்பட்டி சார் ஆட்சியர் உடனடியாகக் கூட்டி, விபத்துக்களைத் தடுத்திட உரியச் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்க்ளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லையா, ஞானம், வினோபா ஆகியோர் தலைமை தாங்கினர்.

மேலும், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், இந்திய கலாச்சார நட்புறவுக் கழக மாநிலத் துணைத்தலைவர் அபிராமி முருகன், மாநிலக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிரிஸ்டோபர், தொழிலதிபர் ஷாம் சுந்தர், மக்கள் நீதி மய்யம் ரமேஷ், ராதாகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி செண்பகராஜ், பகத்சிங் ரத்ததான கழகம் காளிதாஸ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார், ஜெகன், உலக திருக்குறள் கூட்டமைப்பு முத்துச்செல்வம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாக்கியராஜ், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார் உட்படப் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory