» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூக்குத்தண்டனை கைதிகளுக்குச் சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்க கோரிய மனு தள்ளுபடி!

ஞாயிறு 14, ஜூன் 2026 9:06:46 AM (IST)

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை பெற்று சிறையிலுள்ள ஐந்து முன்னாள் காவலர்கள், தங்களுக்குச் சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்கித் தருமாறு கோரிய மனுக்களை மதுரை மாவட்ட நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கடந்த 2020-ஆம் ஆண்டில் காவல்துறை விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த இருவர் அடுத்தடுத்துப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போதைய சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், காவல் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட ஒன்பது காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சுமார் ஆறு ஆண்டுகள் நடைபெற்றது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலர்கள் ரேவதி, பியூலா உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாட்சிகள், கைதான காவலர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.

விசாரணை முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வழக்கில் கைதான ஒன்பது முன்னாள் காவலர்களுக்கும் தூக்குத்தண்டனை விதித்து கடந்த ஏப்ரல் மாதம் மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தற்போது அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, சிறையில் தங்களுக்கு முதல் வகுப்பு அறைகள் ஒதுக்கித் தருமாறு ஸ்ரீதர், ரகு கணேஷ், சாமதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து ஆகிய ஐந்து பேர் மட்டும் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணையின் போது, "மனுதாரர்கள் இரட்டைக்கொலை வழக்கில் தூக்குத்தண்டனை பெற்றுள்ளனர். இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு மதுரை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, இவர்களின் கோரிக்கையை ஏற்கக் கூடாது" என மத்திய புலனாய்வுத் துறை தரப்பிலும், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலும் கடுமையான ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள், "மனுதாரர்கள் பட்டப்படிப்பை முடித்தவர்கள், சமூகத்தில் அந்தஸ்துடன் இருந்தவர்கள். விசாரணை கைதியாக இருந்தபோது இவர்களுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. எனவே, இப்போதும் முதல் வகுப்பு அறை ஒதுக்க உத்தரவிட வேண்டும்" என வாதாடினர்.

வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக அந்தஸ்து, கல்வி அல்லது வாழ்க்கை முறை ஆகியவற்றின் அடிப்படையில் உயர்தர வாழ்க்கை முறைக்குப் பழகிய கைதிகளுக்கு மட்டுமே சிறையில் முதல் வகுப்பு அறைகள் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் ஆவர். அநாகரிகமான, அருவருக்கத்தக்க செயல் அல்லது தீவிரமான ஒழுக்கக்கேடு தொடர்பான குற்றத்திற்காகத் தண்டனை பெற்ற எந்தவொரு நபரும் முதல் வகுப்பு அறைகளில் வைக்கப்படக் கூடாது எனச் சிறை விதிகள் கூறுகின்றன.

மனுதாரர்கள் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் என்பதில் எந்தச் சர்ச்சையும் இல்லை. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரிதினும் அரிதான வழக்கு என்று வகைப்படுத்தி மனுதாரர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

மனுதாரர்கள் மற்றவர்களுடன் இணைந்து இரண்டு அப்பாவிப் பொதுமக்களைச் சட்டவிரோதக் காவலில் வைத்திருந்ததும், அவர்களைக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து படுகொலை செய்ததும் இந்தத் தீர்ப்பின் மூலம் தெளிவாகிறது. எனவே, காவலர்களாகப் பணியாற்றிவிட்டு இத்தகைய கடுமையான ஒழுக்கக்கேட்டை வெளிப்படுத்திய மனுதாரர்களுக்குச் சிறையில் முதல் வகுப்புப் பெற எவ்வித உரிமையும் இல்லை. இதன் காரணமாக இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory